a K.Vijay Anandh review
ஒரு நொடிக்கு நாலு கட் ஷாட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, நீண்ட ஷாட்டுகளாகக் கொடுப்பதற்கு, மிகப்பெரிய பொறுமை வேண்டும். அதுவும், ஐம்பது வயதிற்கு மேற்பட்டு வரக்கூடிய நிதானமான பட ஆக்கம், இயக்குநர் கிருஷ்ண பாண்டிக்கு இளம் வயதிலேயே கைகூடியிருப்பதற்கு முதலிலேயே ஒரு பாராட்டு.
அட சுமார் மூஞ்சி குமாரென்றாலும், அழகான பெண்களைத் துரத்தி துரத்தி காதலிக்கும் கதாநாயகர்களையே பார்த்து பழகிவிட்ட நமக்கு, ஒரு தேவதையால் விரட்டி விரட்டி காதலிக்கப்படுகிறார் ரெஜித் மேனன்.
தமிழ் நாட்டுலயே ஏன், வேர்டுலயே இப்படி ஒரு அதிஷ்டசாலி இருக்க முடியாது தான்.
கோயில் குருக்களாக மெளலி, அவரது பேத்தி நாயகி ராதிகா பிரீத்தி அழகான பாத்திரப்படைப்புகள். கிராமத்தில் மட்டும் தான் அன்பான தாத்தாக்கள் இருப்பார்களா..? தாத்தாக்கள் எங்கிருந்தாலும், அன்பானவர்களே என்று புரிய வைக்கிறார் மெளலி.
ராதிகா பிரீத்தி, பெரிய வசனங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், கண்களாலேயே பேசிவிடுகிறார் நிறைய.
காதல் உண்மையாகவும் ஆழமாகவும் இருந்தால், காதலனின் கனவுக்குள் சென்று கூட தன் காதலைச் சொல்ல முடியும் என்பது தான் எம்பிரானின் ஒருவரிக்கதையாக இருக்கவேண்டும்.
காதலிக்கு எந்தவிதத்திலும் ஒரு குற்ற உணர்வு வந்துவிடக்கூடாது என்று, ராதிகா பிரீத்தியின் காதலை, புத்தம்புதிதாகவே ஏற்றுக் கொள்ள ரெஜித் மேனன் முடிவெடுக்கும் தருணம், காதலுக்கு மரியாதை.
கபிலனின் வரிகள் பிரசன்னாவின் இசையில் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவும் இயக்குநர் கிருஷ்ண பாண்டிக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.
எம்பிரான், காதலனோ காதலியோ ஒருவருக்கு இன்னொருவர் பிராண், அதாவது பிராணனே, அதாவது உயிரே என்று சிறு கவிதை வடித்திருக்கிறார், கிருஷ்ண பாண்டி.