a K.Vijay Anandh review
கோடம்பாக்கத்தில் இப்படி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்ல படங்களின் வாடை அடித்து நெடு நாள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். பெற்றோர்களின் முக்கியத்துவமே தெரியாத இன்றைய தலைமுறைக்குத் தாத்தாக்களின் முக்கியத்துவம் எங்கே தெரிந்துவிடப்போகிறது.
கணவனால் கைவிடப்பட்டுக் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் எத்தனையோ பெண்களைப் பற்றி தினம் தினம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு கைகொடுக்க ஒரு நெருங்கிய உறவென்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லாததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
என் மகன் வயித்துப் பேரன்/பேத்தி, என் மக வயித்துப் பேரன்/பேத்தி என்று சொல்லிக் கொண்டு வாஞ்சையாக தங்களது பேரக்குழந்தைகளைத் தூக்கிச் சுமக்கும் தாத்தாக்கள், இன்று அரிதாகப் போய்விட்டார்கள். ஆறுதலுக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிராமங்களில் அப்படிப்பட்ட மூத்த தெய்வங்கள் இன்றும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கிட்டா அவ என் பிள்ளையில்லை என்று ஆகிடுமா..? அவ என் ரத்தம்… அவளைத் தவிட்டுக்கா வாங்கிட்டுவந்தேன் என்று கூறிக்கொண்டே, பொறுப்புகளை இறக்கி வைக்கும் காலத்தில், தன் மகள் செந்தி மற்றும் பேரன் இளங்கோ அவரது தங்கை ஆகியோரைச் சுமக்க ஆரம்பிக்கிறார். மகன் மைம்ஸ் கோபி, மூக்கையா , ஓடிப்போன தங்கச்சி மேல எப்பொழுதுமே மூர்க்கையா வாக நடந்துகொள்ள, அவரிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்புமாக, தாத்த கருவாத்தேவர் – பூராமிற்கு சுமை கூடித்தான் போய்விடுகிறது.
எனக்குப் பிறகு, உன் ஆத்தாவையும் தங்கையையும் நீ தான் சுமக்கவேண்டும் ஆகவே, ஒழுங்கா படிச்சு முன்னேறும் வழியைப் பாரு என்று சொல்லிச் சொல்லி வளர்த்ததினாலோ என்னவோ, இளங்கோவிற்கு காதலில் கூட விழத்தயக்கம்.
இன்னொரு பக்கம் அமுதா – அஞ்சலி நாயர் , சிறுவயதிலேயே இளங்கோ கண் முன்னாடியே தந்தையை இழந்து அண்ணன் அரவணைப்பில் வளருகிறார்.
அவருக்கு இளங்கோ மீது ஏற்படும் காதல், மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது, ஒரு வகையில் உறவுக்காரப் பையன் தான். அங்கே சாதிப்பிரச்சினைகள் எழவில்லை, ஒரே சாதியாக இருந்தாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருந்தடையாக இருப்பதாலும் காதலில் பிரச்சினைகள் வரும் என்பதை அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன்.
ஒரு பக்கம் பூ ராம் என்றால் இன்னொரு பக்கம் அஞ்சலி நாயர் என்று நடிப்பில் போட்டிபோட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இளங்கோவும், கிராமத்தில் பார்க்கும் நம் உறவுக்காரப் பையனாகவே வருகிறார். அவர்களிருவரும் மட்டுமல்ல, ஒரு சில காட்சிகளேலே வந்தாலும் மைம் கோபி, அவரது மனைவியாக – பெரும்பாலும் அவுட் ஆஃப் போகஸிலேயே வந்தாலும் – நடித்தவரும் கவனிக்க வைக்கிறார்.
இந்தப்பக்கம், அஞ்சலி நாயரின் அண்ணன், அஜய் நடராஜ் தமிழ் நாட்டில் குடும்ப சூழ் நிலையைப் போற்றும் பல அண்ணன்களை நினைவுபடுத்திவிடுகிறார். ஆனால் ஒன்று, படத்தில் இளங்கோவுடனான அஞ்சலி நாயரின் காதல் கைகூடுகிறதோ இல்லையோ, நிஜத்தில் தமிழ் ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் அஞ்சலி நாயரைக் காதலிக்கப் போவது உறுதி.
ஐந்துகோவிலன், தமிழ் சினிமா இவரைப் போன்ற நடிகர்களை ஏன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்படும் அளவிற்கு, அப்படியே வாழ்ந்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா வரிசையில், பெரிதும் விரும்பப்படும் துணைக்கதாபாத்திர நடிகராக வலம் வருவார் என்பது உறுதி.
வைரமுத்துவின் வரிகள், ஜோஸ் பிராங்க்ளின் இசையில் தாலாட்டுகின்றன. ஜோஸ் பிராங்க்ளின், தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம்பிடிப்பார்.
வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில், நடிகர்களும் சரி, வயல்வெளிகளும் சரி, கிராமத்துத் தெருக்களும் சரி ஒவ்வொன்றும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டு, நாம் அந்த கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வைத் தருகின்றது.
படம் பார்த்தபிறகு, ஒவ்வொரும் ஏதாவது ஒருவிதத்தில் தங்களை இந்தப்படத்துடன் இணைத்துக் கொள்வீர்கள் என்று இயக்குநர் செல்வக்கண்ணன் கூறியது 100 க்கு 100 உண்மை.
"தனிப்பட்ட முறையில், நான் என் தாத்தாக்கள் கண்முன்பு சாதித்துக் காட்டமுடியவில்லையே என்று ஏங்கினேன். 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே என் இரு தாத்தாக்களையும் இழந்துவிட்ட காரணத்தால்..."
தனிக்குடித்தனங்களில் வசிக்கும் பிள்ளைகள், தனியாக வசிக்கும் தங்கள் தாத்தா பாட்டியைப் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று நினைக்கலாம்….
சுய நலமாக குடும்பத்துடன் வாழும் அண்ணன்கள், நம்ம தங்கச்சி அல்லது அக்கா எப்படி இருக்காங்க என்று பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு எடுக்கலாம்...
தங்கச்சி அல்லது அக்கா மாப்பிள்ளைக் குடித்துவிட்டு ஊதாரியாக இருந்தால், நாலு வெளுவெளுத்துவிட்டு இனிமே தங்கச்சியை ஒழுங்கா பார்த்துக்கடா என்று சொல்லிவிட்டு வரலாம்….
நகை நட்டு / சீர் செனத்தி கொடுத்துக் கல்யாணம் பண்ணி அனுப்பியாச்சுல்ல, இனி எக்கேடு கெட்டுப்போனா என்ன என்று நினைக்காமல், தங்கை மகனோ மகளோ என்ன படிக்கிறீங்க, ஏதாவது உதவி வேண்டுமா, நல்லா படிங்க என்று வாயார வாழ்த்த முற்படலாம்..
குடும்ப சூழ் நிலைகளில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, சமூக மாற்றத்திற்கு அச்சாரம் இட்டிருக்கிறது, அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன் இயக்கியிருக்கும் இந்த நெடுநல்வாடை.