a K.Vijay Anandh review
படத்தின் தலைப்பே சத்ரு அதாவது வில்லன். என்று வைத்துவிட்டதாலோ என்னவோ, வில்லனாக வரும் லகுபரன் ஒரு படி தூக்கலாய் ஸ்கோர் Score செய்துவிடுகிறார். ஐம்பது ஐம்பத்தைந்து வயதில், தொந்தியும் பெல்டுமாய் அல்லது கோட்டும் சூட்டுமாய் வில்லன்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் மலையேறிப்போச்சு. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்றைய தேதியில் இளம் குற்றவாளிகள் தான். துரதிஷ்டவசமாக, மீசை கூட சரியாக முளைக்காத அந்தச் சிறுவர்கள் , கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத குற்றச் செயல்களைச் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள், நிஜத்திலும். அதைதான் சத்ருவிலும் பிரதிபலித்திருக்கின்றார்கள்.
அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாத குழந்தைகளென்றாலும் பரவாயில்லை, சர்வதேசச் சந்தையில் அவர்களின் மதிப்பு பல லட்சங்கள். அப்படி குழந்தைகளைக் கடத்தி விற்கும் இளங்குற்றவாளியாக லகுபரன், அவருக்குப் பின்னால் ஒரு நான்குபேர். அவர்களைப் பார்த்தாலே பயமாய் இருக்கிறது, அந்தளவுக்குக் கொடூரத்தைத் தவிர வேறொன்றும் தெரியாதவர்களாய்.
அப்படி, ஒரு குழந்தைக்கடத்தல் வழக்கில் ஈடுபடும் போது, நேர்மையான காவல்துறை அதிகாரி கதிரால் , அவர்களது முயற்சி முறியடுக்கப்படுவதோடு, அந்த கூட்டத்தில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுகிறான். வியாபாரமும் நடக்கவில்லை, கூட்டாளியையும் இழந்துவிட்டோம் என்கிற ஆத்திரம் தலைக்கேற, அடுத்த 48 மணி நேரத்தில் கதிரின் குடும்பத்தாரையும் கதிரிக்கு உதவும் நண்பர்களையும் போட்டுத்தள்ள, லகுபரன் செய்யும் சதிவேலைகளும் அதனை முறியடிக்க கதிர் எடுக்கும் முயற்சிகளும் தாம் விறுவிறுப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கதிர், ஒரு கம்பீரமான இளம் காவல்துறை அதிகாரியாக, உயரதிகாரிகளின் அழுத்தங்களையும் மீறி, துப்புதுலக்குவது அருமை.
கண்முன்னாடி வில்லன்கள் தப்பித்துச் செல்வது இதற்கு முன்பும் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்டுவிட்டதால், கொஞ்சம் செயற்கையாக திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.
கதிரிக்கும் லகுபரனுக்குமான துரத்தல்களே முழுப்படமும் என்பதால் சிருஷ்டி டாங்கே, நீலிமா போன்றோர்களுக்கு அதிகவேலை இல்லை என்றாலும் கதிரின் அப்பாவாக வரும் முன்னாள் இராணுவ வீரரான பொன் வண்னன், ஒரு கட்டத்தில் கதிரை உத்வேகப்படுத்தும் காட்சி அழகு. கதிரின் அண்ணன் பவனையும் இன்னும் கொஞ்சம் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
அந்த 48 மணி நேரத்தில் இன்னொரு ஐந்துகோடிக்குத் திட்டமிடாமல், கதிரின் குடும்பத்தை வேரறுப்பது என்கிற அளவிலேயே காட்சிகள் நகர்ந்திருந்தால், சில இடங்களில் தோன்றும் சலிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். அதைப்போலவே, தெருக்கூத்துக் கலைஞர்கள் ஒருபக்கம் சூரபத்மனின் வதத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருப்பதையும் தவிர்த்துவிட்டு, பத்து பதினைந்து நிமிடம் குறைவாக இருந்தாலும், சொல்ல வந்த கதையை மட்டும் விறுவிறுப்பாகச் சொல்ல முயற்சித்திருக்கலாம்.
ஆனாலும், நேரத்தைப் போக்குவதற்கு எங்கேயும் பாடல்களைத் திணித்துவிடாமல் காட்சிகளாலேயே கதையை நகர்த்தும் இயக்குநர் நவீன் நஞ்சுண்டனின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
நாயகனால் வில்லன்கள் வதம் செய்யப்பட்டாலும், சத்ரு, வில்லனுக்கான படம்.