a K.Vijay Anandh
ஒருவருக்கொருவர் சம்பந்தமேயில்லாத நாயகன், நாயகி, பாட்டி, சிறுமி, பெரியவர்கள், இரண்டு விடலைப் பையன்கள். அவர்களைக் குடும்பமாக இணைப்பது நடைபாதை தான்.
கட்டணக்கழிவறையில் வேலைபார்க்கும் முருகன் தான் நாயகன். கடவுள் முருகனின் பிறப்பு கார்த்திகை குளத்தில் என்றால், இந்த முருகனின் பிறப்பு அந்தக் கழிவறையில் தான். ஆம்., முறைகேடான உறவினால் பிறக்கும் குழந்தையை, அப்பல்லோ மருத்துவமனையிலா பெற்றுக் கொள்ளமுடியும்..!?
வளர்ந்து ஆளாகி, நாம் பிறந்த இடம் இதுதான் என்று தெரிந்து, அந்த மொத்த கழிப்பறைகளையும் கோயிலாகப் பார்த்துக் கொள்ளும் அழகு, அமர்க்களம்.
பழைய பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் வேலைபார்க்கும் நாயகி. இருவருக்குமிடையே யான காதலும் அழகு.
கழிப்பறை முழுவதும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சி தமிழ் சினிமா கண்டிராதது.
காசு கொடுத்து கழிவறை செல்லமுடியாததால் தான் அவனவன் தெருவிலும் சாலையிலும் மல ஜலம் கழிக்கிறான். சுத்தமான இந்தியா திட்டத்திற்குச் செலவளிக்கும் தொகையை இவய்ங்களுக்குக் கொடுத்துப் பாருங்க, ஒருத்தனும் பொது இடங்களை அசி ங்கப்படுத்த மாட்டான் என்று முருகனிடம் வாக்குவாதம் செய்யும் சிறுவனின் கூற்றை மறுப்பதிற்கில்லை.
இடி, மழை, வெயில் என்று எந்த இடையூறுகள் வந்தாலும், தானுண்டு தன் அடுப்புண்டு.என்று சமைத்து நடைபாதை வாசிகளுக்குப் பசியாற்றிக் கொண்டே இருக்கும் அந்தப் பாட்டியின் பாதங்களில் விழுந்து வணங்க த் தோன்றுகிறது.
எப்படியாவது, உழைத்துச் சம்பாதித்து ஒரு வாடகை வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்று ஒரே ஒரு ஆசைதான் அந்தச் சிறுமிக்கு, நன்றாகப் படிக்கிறாள், கிடைக்கும் நேரத்தில் தண்ணீர் கேன் போடுகிறாள். அவளையும் அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. முருகனை அண்ணன் அண்ணன் என்று அழைக்கும் போது, இந்த சமூகத்தையே அழைப்பதாகத் தோன்றுகிறது.
குற்றச்செயல்களில், உண்மையான குற்றவாளிகளிடமிருந்து பெறும் லஞ்சப்பணத்திற்காக நடைபாதைவாசிகளைப் பிடித்து ஜெயிலில் போடுவது கொடுமையிலும் கொடுமை. ஒரு வாரம் இல்ல பத்து நாள் நான் திரும்பி வந்துருவேன் கண்ணு என்று அந்தப் பாட்டி கூறும் போது, கண்கள் பீறிடுகிறது, படம் பார்ப்பவர்களுக்கு.
அங்கொன்றும்.இங்கொன்றும் நடக்கின்ற விஷயம் என்று புறந்தள்ளிவிட முடியாது. நாடுமுழுவதும் பல கோடிப்பேர் இப்படி குடும்பங்கள் இல்லாமல், ஏன் இந்த நாட்டின் குடியுரிமை இல்லாமல் நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது எதிர்காலம் என்ன..? அவர்களுக்கு எல்லாமும் கொடுத்து அவர்களது பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது தான் நாகரீக சமூகத்தின் கடமையாக இருக்க முடியும்.
முருகனாக வரும் நேசம் முரளி, அவரது காதலி டயானா வாக வரும் நந்தினி, முருகனின் தங்கை வேளாங்கண்ணி யாக வரும் சிறுமி ஐஸ்வர்யா, பெயரில் கோடீஸ்வரியாக பிளாட்பார்மில் காலம் தள்ளும் பாட்டியாக வான்மதி, இரும்புக்கடை பாயாக வரும் பாண்டு மற்றும் மன்சூரலிகான் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மிகச்சிறப்பான கதைக்களம் மிகச்சிறப்பான என்று சொல்வதை விட மிக மிக அவசியமான கதைக்களம், தன்னால் முடிந்த அளவிற்கு நேர்மையாக எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார் நேசம் முரளி.
இந்தப்படம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்குப் போட்டுக் காட்டப்பட்டதும், படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியதுடன், கபிலவஸ்துவின் முக்கிய கோரிக்கையான, நடைபாதைவாசிகளுக்கான வாரியம் அமைப்பது குறித்து ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்திருப்பதுமே படத்திற்கு வெற்றியைக் கொடுத்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
இந்தப்படத்தைப் பார்க்கும் சித்தார்த்தர்களில் ஒரே ஒரு சித்தார்த்தன் புத்தராக மாறினாலும், இந்த சமூகம் மாறிவிடும்.
கபிலவஸ்து படமும் ஒரு போதிமரமே!