a K.Vijay Anandh review
நாயகி ஸ்ரீ பல்லவிக்கு, இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய சவாலான கதாபாத்திரம்..? அடித்துத் தூள்பறத்தியிருக்கிறார். நாயகன் ஆனந்த் பாண்டியின் காதலை அவர் ஓகே செய்த பிறகு அவர்களிருவருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் அதகளம், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் ரகம். ஆனாலும், ஒரு கட்டத்தில் அழவும் வைத்து விடுகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.
சத்யாடா என்று மீசையை முறுக்கிய இளைஞனா இவர்..? அட எல்லோருக்கும் வயதாகும் தானே. வயதான சத்யா , சாருஹாசன் , சாதி வெறிபிடித்த மிருகங்களை வேட்டையாடுகிறார், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக வன்முறைகளை பிரயோகிப்பவர்களை வெளுத்து வாங்குகிறார். கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவுக்கும் இவருக்கும் இடையில் நடக்கும் திருமணம் தான் நாயகன் ஆனந்த் பாண்டியை ஒரு தீர்க்கமான முடிவெடுக்க உதவுகிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் இயக்கு நர் விஜய் ஸ்ரீ ஜி, பாலாசிங், மணிமாறன், மாரிமுத்து, மனோஜ் குமார் என்று ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜனகராஜ். மனதில் இடம்பிடிக்கும் பாத்திரம். ஓய்வு பெற்ற இராணுவ வீரனாக அவர் பேசும் வசனங்கள், ஏதேச்சையாக புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான சம்பவங்களுடன் ஒத்துப் போவது ஆச்சிரியம்.
லியாண்டர் லீ மார்டி, அல் ருஃபன், தீபன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து நல்லிசையைக் கொடுத்திருக்கிறார்கள்.
ராஜபாண்டியின் ஒளிப்பதிவு , வடசென்னைப் படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான படமாக தாதா 87 ஐக் காட்ட உதவியிருக்கிறது.
காமம் மட்டும் காதலல்ல, நமக்கு மட்டும் காதல் அல்ல என்பதை பிசிறில்லாமல் சொல்லியிருக்கிறது தாதா 87