a K.Vijay Anandh review
மதுவால் வரும் போதை ஆபத்தானது, அதைவிட ஆபத்தானது தவறான உணவுப்பழக்கவழங்கங்களால் ஏற்படும் ஒருவித போதை அல்லது நிலை தடுமாறல். இது இரண்டையும் விட அபாயகரமானது நமது மக்களின் பணத்தாசையால் வரும் நிலைதடுமாறல். இது நம்ம காசு இல்லைன்னு தெரிஞ்சும் பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கொள்வது போன்ற ஈனத்தனம் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்கு நிலை தடுமாறல் என்பதை விட தன்னிலையில் இருந்து இறங்கி சாக்கடையில் விழுதல் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.
கிரேசி மோகன், வழக்கமாக கமல்ஹாசனுக்குத்தான் வசனங்கள் எழுதுவார், அவரே சுந்தர் சிக்கும் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டுமானால், குடிமகானுக்கு செல்லவேண்டும்.
ஒரு தேசத்தின் பொருளாதார முதுகெலும்பு கார்பரேட் கம்பெனிகள் என்றால், மாசம் பத்து பதினைஞ்சாயிரத்துக்கு நேர்மையாக பணியாற்றி குடும்பம் குழந்தைகள் என்று எல்லா சுமைகளையும் சுகமாகத்தாங்கிக்கொண்டு வாழும் உழைப்பாளிகள் பொருளாதாரத்தின் ரத்த நாளங்கள் போன்றவர்கள். அப்படி தானுண்டு தன், ஏ எடி எம் மிஷினில் பணம் நிரப்பும் வேலையுண்டு என்று வாழும் விஜய் சிவா. முதலிரவுக்கு போட்ட மெத்தை, ரெண்டு குழந்தைகளின் சிறு நீரால் சின்னாபின்னமான நிலையிலும் அதை மாற்றச்சொல்லிச்சொல்லி முடியாமல் ஓய்ந்துபோகும் அவரது மனைவி சாந்தினி. காம்பவுண்டில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமாக இருக்கட்டுமே என்று எட்டுப்போட்டு, கையிலும் கட்டுபோட்டு, அடிக்கடி செக்கப்புக்கு சென்று, தன் வயதொத்தவளை பிக்கப் செய்யும் சுரேஷ் சக்ரவர்த்தி. வாண்டுகள் அஜய்கிருஷ்ணா, தர்ஷினி. அப்பா அப்பா என்று சுரேஷ் சக்ரவர்த்தியை சுற்றி வரும், லவ்லி ஆனந்த், அலுவலகத்தில் விஜய் சிவாவின் உதவியாளராக வரும் விஜய் ஆனந்த் என்று முதல் பாதியில் இவர்கள் அடிக்கும் லூட்டியில் படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒரு பேமிலி டிராமாவாக நகர்கிறது என்றால், இரண்டாம் பாதியில் காமெடி சரவெடியாக பட்டையை கிளப்புகிறது.
தனக்கு ஏற்பட்ட அந்த பாதிப்பால், நிலை தடுமாறி, ஏ டி எம்மில் 100 ரூபாய் வைக்கவேண்டிய இடத்தில் 500 ரூபாயை வைக்க, பேராசை பிடித்த மனிதர்களால் எட்டு லட்சம் பணமும் காலியாகிவிட, வேலையை இழந்தாலும், திரும்பவும் ஒவ்வொருவராய் தேடிப்போய் அந்தப்பணத்தை திரும்பக்கொண்டு வந்து வேலைக்கு சேர விஜய் சிவா எடுக்கும் முயற்சிகளே இரண்டாம் பாதி. அவரது முயற்சிக்கு, அவரது அப்பாவின் பால்ய சிஷ்யன் – குடியில் – நமோ நாராயணன் உதவ முன்வர அவரோடு சேந்து KPY ஹான்ஸ்ட் ராஜ், ஜி ஆர் கதிரவன் அடிக்கும் லூட்டிகள் போதாக்குறைக்கு உணவு டெலிவரி டென்னிஸ்ஸின் பாவாடை லூட்டிகள், இவர்களோட பணத்தை திருடினவர்களைத் தேடிப்போகும் இடங்களில், பாதிக்கப்படும் புதுமாப்பிள்ளை ஜி எல் சேதுராமனின் சோக படலம் என்று இரண்டாம் பாதி எக்ஸ்பிரஸ் வேகத்தில் கலகலவென்று பயணிக்கின்றது.
அறிமுக நடிகர் விஜய் சிவாவிற்கு, நிஜமாகவே கொஞ்சம் சவாலான கதாபாத்திரம் தான், இருந்தாலும், டி ஆர், சசிகுமார் வரிசையில் மூன்றாவதாக தாடி வைத்த நாயகனாக அறிமுகமாகி, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சாந்தினி, இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியிருக்கிறார். நைட்டியுடனே எந்நேரம் இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு மத்தியில், படம் முழுவதும் சேலையுடனேயே வந்து வசீகரிக்கிறார். பீட்சா ஆர்டர் செய்தபின் அப்பாவின் மொபைலில் அதன் டிராக்கையே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் குறையே இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுரேஷ் சக்ரவர்த்தி கேட்கவே வேண்டாம், ஒரு நல்ல சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் இல்லாத குறையை போக்கிவிடுகிறார்.
லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், டென்னிஸ் குறிப்பாக ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் விறுவிறுப்பான கதை நகர்தலுக்கு உதவியிருக்கிறார்கள்.
மார்ச் 17 வெளியான படங்களில் ஒரு நல்ல கண்டண்ட் அதற்கான நேர்மையான மெனக்கெடல் என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பிடிப்பது சந்தேகமே இல்லாமல் பிரகாஷ் என் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குடிமகான் திரைப்படமாகத்தான் இருக்கமுடியும்.
மதுபோதை தரும் கெடுதலை விட , தவறான உணவுப்பழக்கவழக்கம் ஆபாத்தானது, பணத்தாசை கேவலமானது, எந்த சூழ் நிலையிலும் நேர்மையாக இருந்துவிடால் வாழ்க்கை அனைத்தையும் விட அழகானது என்று சொல்லும் குடிமகனை குடும்பத்துடன் சென்று பாருங்கள்!