a K.Vijay Anandh review
அறிவின் உச்சத்தை கிரிமினல் வேலைக்கு பயன்படுத்தும் ஒரு மனோதத்துவ மருத்துவர், அவர் வழியிலேயே அவருக்கு மருத்துவம் கொடுத்து அவர் செய்த தவறுகளை அவரே செய்ததாக ஒத்துக்கொள்ள வைத்து சிறைக்கு அனுப்பும் இன்னொரு மனோதத்துவ மருத்துவர் மற்றும் நேர்மையான காவல் அதிகாரி.
தனக்கென்று ஒரு தனி அடையாளத்துடன் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நாயகன் வெற்றி, இந்தப்படத்தின் – குறிப்பாக கதையின் இறுதிகட்டங்களில் காதல்கொண்டேன் தனுஷை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
நாயகி ஜானகியாக வரும் பார்வதியை படத்திற்குள் வரும் கதைக்குள் பயன்படுத்திய விதம் அருமை. யாரோடு ஜோடியாக அறிமுகம் ஆகிறாரோ அவரை கைது செய்யவும் உதவும் மருத்துவராகவும் வருவது அழகான காட்சி அமைப்பு.
இன்னொரு நாயகியாக, வெற்றி நிஜமாகவே காதலிக்கும் மருத்துவராக வரும் டயானாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆர் என் ஆர் மனோகர், ஹரீஷ் பேரடி, ரமேஷ் திலக், சாஜி என்று படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கவாஸ்கர் அவிநாஷின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமை.
கம்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்புகள் போன்று, மனித மூளையிலும் டேட்டாக்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நினைவுகளில் மாற்றங்கள் செய்வது என்கிற அசாத்தியமான அறிவியல் கண்டுபிடிப்பு எப்படி சுய நலத்திற்கும் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை காவு வாங்குகிறது என்கிற சிக்கலான விஷயத்தை, அதே அளவுக்கு சிக்கலான திரைக்கதையுடன் இயக்கியிருந்தாலும் பயமுறுத்த வைக்கிறார் இயக்குநர் ஸ்யாம் பிரவீன்.