a K.Vijay Anandh review
அப்பா நந்தாவாக வரும் ஜெயம்ரவி - ஒரு தலைமுறை நல்லவனாக இருந்தாலும் அப்பாவியாக இருந்து கூட இருப்பவர்களாலேயே வஞ்சிக்கப்படுகிறது.
மகன் அகிலனாக வரும் ஜெயம் ரவி – அடுத்த தலைமுறை நல்லவனாக மட்டுமல்லாமல் வல்லவனாகவும் இருந்து, கூட இருப்பவர்களை – தனது காதலி உட்பட – தனக்கு சாதகமாக பயன்படுத்தி , தேவைப்பட்டால் அடித்து மிதித்து போட்டுத்தாக்கி - ஜெயிக்கிறது.
இன்றைய தேதியில் இந்தியப்பெருங்கடலின் ராஜா, இந்தியக்கடற்படை தான். அகிலன், சென்னை துறைமுகத்தின் ராஜா. ஆம், படம் முழுவதும், அகிலனின் ஆட்டங்கள் முழுவதும் சென்னை துறைமுகத்திலேயே நடைபெறுகின்றன.
காட்சிக்கு காட்சி தனக்கு எதிராக நிற்பவர்களை , அதாவது தவறானவர்களை தனது வார்த்தைகளாலேயே உணர்ச்சிவசப்படுத்தி அவர்களையே தவறு செய்யத்தூண்டி பலிகடா ஆக்குவது, நல்லவர்கள், ஆப்ரிக்கர்கள் என்றாலும் அவர்களை நண்பனாக அரவணைத்துக்கொள்வது, அப்பாவால் ஒரே ஒரு நல்ல காரியத்திற்காக முயன்று தோற்றுப்போன விஷயத்தை – உலகம் முழுவதிலும் உள்ள கஷ்டப்படும் மக்களுக்காக சாதித்துக்காட்டுவது என்று அகிலனாக வரும் ஜெயம் ரவி அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
அழகும், ஆஜானுபாகுவுமான அருண்மொழி வர்மனாக பொன்னியின் செல்வனின் பார்த்து ரசித்த ஜெயம் ரவி, இதில் அப்படியே கரடுமுரடான ஒரு துறைமுக தொழிலாளியாக இன்னொரு பரிமாணம் எடுத்திருக்கிறார்.
மறைந்த இயக்கு நர் ஜன நாதனை கெளரவிக்கும் விதமாக, துறைமுக தொழிலாளர் தலைவனாக வரும் மதுசூதன் கதாபாத்திரம், என்னடா அமைதியாக வந்துபோய்க்கிட்டு இருக்காரே என்று நினைக்கும் போது, அவரை வைத்து ஒரு தொண்டு கப்பல் வாங்கும் விதம் அருமை. நிஜமாகவே ஜனநாதனின் ஆன்மா மகிழும், வாழ்த்தும்!
இந்திய அரசின் சிறப்பு அதிகாரி கோகுலாக வரும் சிராக் அட்டகாசமாக நடித்திருக்கிறார். ஹரீஷ் பேரடி, சாய் தீனா ஆகியோருடன் படம் முழுவதும் ஒரு தவறான துறைமுக அதிகாரியாக வரும் ஹரிஷ் உத்தமன் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அப்பா ஜெயம்ரவி ஜோடியாக வரும் தன்யா, மகன் ஜெயம் ரவியின் ஜோடியாக வரும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவருக்குமே பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அவரவர் பாத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக, அப்பா ஜெயம்ரவி காலகடத்தில் வரும் துறைமுக சரக்கு ஏற்றும் காட்சிகள், அதாவது இன்றைய நவீன கிரேன்கள், கண்டெய்னர்கள் இல்லாத காலகட்டங்களில் பெரிய வலையில் மூட்டைகளை வைத்து தூக்கி கப்பலுக்கு மாற்றப்படுவது கூடவே அதனை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களும் தொங்கிக்கொண்டே செல்வது போன்ற காட்சியமைப்புகள் இன்றைய தலைமுறைக்கு மிகவும் புதிதாக இருக்கும். கலை இயக்கு நர் ஆர்.கே.விஜய்முருகனுக்கும் ஒரு சபாஷ்.
இவ்வளவு பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் மிகவும் இயல்பாக இருப்பது ஆச்சிரியம். இன்னும் நாலு சண்டைக்காட்சிகள் வைத்திருக்கலாம் என்கிற அளவிற்கான கதைதான் என்றாலும், அதையும் அளவோடு வைத்து கதையோட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் மிராக்கிள் மைக்கேல்
விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் பிரமாண்டமான கப்பல்கள் நிறைந்த கதைக்களம் பிரமிப்பான விருந்தாக அமைந்திருக்கிறது.
படத்தில் தேவையில்லாமல் பாடல்களை வைக்காமல், ஒரே ஒரு பாடல் அதிலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் உண்மையான துரோக முகத்தை காட்டும் விதமாக வைத்திருக்கிறார்கள். விவேக் எழுதியிருக்கும் துரோகம்… பாடலுக்கான இசையும் பின்னணி இசையும் அருமை சாம் சி எஸ்.
அகிலத்தையே அரவணைக்க தமிழன்னையை அனுப்பும் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அகிலன், நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடப்படுவான்.
அகிலன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற கனியன் பூங்குன்றனார் வரிகளுக்கு உயிர்கொடுத்திருக்கும் அற்புதமான சிந்தனை.
வழி தவறானலும், இலக்கு சரியானதாக இருக்கட்டும், அகிலனைப்போல!!