a K.Vijay Anandh review
இந்த கேரக்டர் கிடைத்தால் தான் நடிப்பேன் என்பது சினிமா மீதான முழுமையான காதலாக இருக்கமுடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் என்பது தான் கலைமீதான நிபந்தனையற்ற காதலாக இருக்க முடியும். அப்படி ஒரு துணை நடிகராக பார்த்து ரசித்த சுப்ரமணி க்கு இந்தப்படத்தில் மையக்கதாபாத்திரத்தில் அதுவும் இரட்டைவேட்த்தில் நடிக்கும் வாய்ப்பு என்பது கலையின் மீதான அவரது நிபந்தனைகளற்ற காதலுக்கு கிடைத்த பரிசே அன்றி வேறென்ன!வாக இருக்க முடியும்.
அண்ணன் தம்பி வேடமென்றாலே நம் நினைவுக்கு வரும் கதாபாத்திர பெயர்கள் ராம் – லட்சுமணன். இந்தப்பட்த்தில், பதினென் சித்தர்களில் முதன்மையான அகத்தீசர் மற்றும் பழனி மலையில் பழனியாண்டவருக்கு நவபாஷண சிலை அமைத்த போகன் பெயரையும் தாங்கிய அண்ணன் தம்பிகளாக சுப்ரமணி கதாபாத்திரங்களை படைத்த விதமே அருமை. உயர்வான சிந்தனைகளுக்கெல்லாம் உயர்வான சிந்தனை. அதற்காகவே, இயக்குநர் ஓம் விஜய்க்கு பாரட்டுகளை தெரிவித்துக்கொள்ளலாம்.
வெறுமனே கதாபாத்திர பெயர்களாக மட்டுமே சூட்டாமல், அகத்தியரும் போகனும் இவ்வுலகிற்கு வழங்கிய உயரிய உயிர்மருத்துவமாம் சித்த மருத்துவம் பார்க்கும் வைத்தியர்களாகவே அவர்களது வம்சாவளிகளாகவே இந்த கதாபாத்திரத்தை படைத்த விதத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு நமது பாரம்பரிய சித்த வைத்தியத்தையும், சித்தர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களை நோக்கிய தேடலுக்கு தள்ள வைத்த பெருமைக்கும் ஓம் விஜய் சொந்தக்காரர் ஆகிவிடுகிறார்.
ஆயிரம் பேரைக்கொன்றவன் அரைவைத்தியன் என்று ஒரு சொல்லாடல் உண்டு, இதில் உரிய சிகிச்சை அளித்தும் ஒரு உயிர் பறிபோக, சித்தர் குடும்பத்தை ஊரே ஒதுக்கிவைக்கிறது. பழனியாண்டி போலவே கோவணத்துடன் கோபித்துக்கொண்டு கிளம்புகிறான் சிறுவன் போகன், அவனே அப்பாவிடம் முழுவதுமாக வைத்தியம் கற்றுக்கொண்டவன். அரைகுறையாக கற்றுக்கொண்ட அகத்தீசன் அங்கேயே தங்கி குடும்பம் குட்டி, அழகும் அறிவும் நிறைந்த பெண் குட்டி என்று கிராமத்திலேயே தங்கிவிடுகிறார்.
ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த ஊர் நம்மிடம் வைத்தியம் பார்க்கும் என்கிற நம்பிக்கையில்.
ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகப்போன மக்கள் மீண்டும் சித்தமருத்துவம் தேடிச்செல்கிறார்களா..? அகத்தீசன் அருளைப்பெறுகிறார்களா..? ஆரோக்கியத்தை மீட்கிறார்களா..? என்பதே சுவராஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த ஓம் வெள்ளிமலை படத்தின் கதை.
சுப்ரமணி, அகத்தீசன் மற்றும் போகன் கதாபாத்திரங்களில் அருமையாக வாழ்ந்திருக்கிறார். தன் மகளை கரைசேர்க்க காலணா இல்லாத நிலையில் கூட கவலைப்படாமல் திரிபவர், ஒரு வினோத நோயினால் ஊரார் அவதிப்படும் போது அதற்கான மருந்தைத்தர முடியவில்லையே என்று வேதனைப்படும் இடங்களில் அழுதுபுலம்புகிறார். தம்பி ராமையா, போன்று இவருக்கும் ஒரு தேசிய விருது காத்திருக்கிறது. அகத்தீசன் அருளால் அது சாத்தியப்படட்டும்.
அவரது மகள் மனோன்மணியாக வரும் அஞ்சுகிருஷ்ணா, அவரது கதாபாத்திரத்தை பார்க்கும் போது, படம் பார்க்கின்ற உணர்வே இல்லை, கீழ் வெள்ளிமலை காடுகளிலும் மேடுகளிலும் நம் கையைப்பிடித்து அழைத்துச்சென்றுகொண்டிருக்கிறார் என்பது போன்ற உணர்வு.
முறைப்பையன் வனராஜாவாக வரும் வீரசுபாஷ் அவரை விலகி விலகி சென்றாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், அம்மா இல்லாத அவரது தங்கை பெரிய மனுஷி ஆன நிலையில், சத்தான கேழ்வரகுக்களி கிண்டி கொண்டு செல்லும் இடம் கண்களை குளமாக்கும்.
உன் அம்மாவிற்கு கொடுத்த சத்தியத்தினால் தான் உன்னை பார்த்துக்கொள்கிறேன், உங்கண்ணன் என்னை கல்யாணம் பண்ணாவிட்டாலும் உன்னை ஆளாக்கவேண்டியது என்கடன் என்று சொல்லும் போது வனராஜாவும் கலங்கி, சாணிமெழுகிய வீட்டிற்குள் குந்த வைத்து கேப்பைக்களியை எடுத்து சாப்பிட அதை, மனோன்மணி பார்த்து அவர்கள் காதல் ஒரு புள்ளியில் இணையும் இடம் ஆகச்சிறந்த காதல் காட்சி. அடுத்து வரும் பாடல் காட்சி முழுவதும் அந்த உணர்வை நீட்டித்துக்கொண்டே இருந்திருக்கலாம், பாரதிராஜா படங்களில் வருவதுபோன்று.
வனராஜாவாக வரும் வீர சுபாஷும் கச்சிதமான தேர்வு, அருமையாக நடித்திருக்கிறார்.
அவர்கள் தவிர, பயில்வானாக வருபவர் முதல், அகத்தீசன் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் பார்க்கும் ஒரே தாத்தா மற்றும் அவரது பேரன் முதல் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அடுத்தடுத்து பாடல்கள் வருவது போல இருந்தாலும், கு.கார்த்திக் மற்றும் கருமாத்தூர் மணிமாறன் ஆகியோரது பாடல்களை ரகுநந்தன் இசையில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. மணிபெருமாளின் ஒளிப்பதிவில் மலைகளும் மலைசார்ந்த கிராமங்களும் நம் மனதை கொள்ளையடிக்கின்றன. கதாபாத்திரங்களுடன் கதாபாத்திரமாக பல காட்சிகள் மலைமுகடுகளை தொட்டுச்செல்லும் மேகங்களும் வந்துசெல்வது அருமை.
இந்த இளம் வயதில் சினிமா தயாரிப்பது என்று முடிவு செய்துவிட்டால், காதல், காமெடி, திரில்லர், ஹாரர் என்று ஒரு வணிக உத்திரவாதமுள்ள படத்தை தயாரித்து காசுபாத்திருக்கலாம் என்று எண்ணாமல், புதிதுபுதிதாக முளைக்கும் நோய்களால் அவதிப்படும் மனிதகுலத்தை காப்பாற்ற அரூபமாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்கள் திரும்பவும் உருவமெடுத்து வந்தால் நன்றாக இருக்குமே என்கிற இயக்குநரின் பேராசைக்கு தீனி போட்ட விதத்தில், தயாரிப்பாளர் ராஜகோபால் இளங்கோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அகத்தியரையும், போகரையும் பற்றிப்பேசும் படத்தில் தெரசாவை பற்றி எதற்கு வசனம் வைக்கவேண்டும்..? இயக்குநர் ஓம் விஜய் அவர்களே! வெள்ளி உருகி உருள்வது போல கொட்டும் அருவியில் கலந்துவிட்ட தேவையில்லாத ஒன்றாக அமைந்துவிட்டது அந்த காட்சி.
அதை நீக்கிவிட்டு பார்த்தால்,
ஓம் வெள்ளிமலை ஒப்பற்ற படைப்பு.
ஓம் வெள்ளிமலைக்கு சென்று வாருங்கள்.