a K.Vijay Anandh review
கல்விக்கொள்ளையை பற்றி, முடிந்தளவு சொல்லியிருக்கிறார் வாத்தி. சமுத்திரக்கனியின் தனியார் பள்ளியில் விடுதி மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக்கொண்டிருக்கும் தனுஷ், சோழவரம் என்கிற குக்கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு ஒப்பந்த ஆசிரியராக அனுப்பப்படுகிறார். சமுத்திரக்கனி எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்த அரசுப்பள்ளி மாணவர்களை அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை படிக்க வைக்கும் சமுத்திரக்கனியின் பள்ளி மாணவர்களை விட சிறப்பாக படிக்க வைத்துவிடுகிறார். அதனால் என்ன நடக்கிறது என்பதே விறுவிறுப்பான வாத்தி.
இணையம் வழியாக, செயலி வழியாக கோலோச்சிக்கொண்டிருக்கும் ஆன்லைன் கல்வி என்கிற ஐடியாவை சற்றே முப்பது வருடம் பின்னோக்கி கொண்டு சென்று ஆன் ஸ்கிரீன் கல்வியாக, அதாவது வெள்ளித்திரையில் திரையிடும் கல்வியாக மாற்றி சிந்தித்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் திரைக்கதை சுவராஸ்யமாக இருக்கிறது. எதிர்காலத்தில் நடப்பதாக யோசிப்பது ஒரு வகை, இன்றைய தொழில் நுட்பம் – இணையம் இல்லாத காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று யோசிப்பது இன்னொரு வகை. பிட்டு படம் ஓடிக்கொண்டிருந்த லட்சுமி திரையரங்கம் கடைசியில் நிஜமாகவே கலைமகளின் ஆலயமாக மாறிவிடுவதும், தொடர்ந்து அவ்வாறே இயங்கிக்கொண்டிருப்பதும் அழகு.
தனியார் பள்ளி நடத்தலாம் தவறில்லை, ஆனால், அடிப்படை செலவினங்கள் தாண்டி ஒரு ரூபாய் அதிகமாக சம்பாதித்தாலும் குற்றமே என்று மனசாட்சிப்படி நடந்துகொண்டால் சமூகத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால், அரசியலை விட பெரிய வருமானமாக கல்வியை வியாபாரப்பொருள் ஆக்கினால், கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிடும். துரதிஷ்டவசமாக, இலவசமாக கல்வி கொடுக்கவேண்டும் என்கிற பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அவர்களும் குடும்பத்தார் மற்றும் பினாமிகள் பலர் அதிகளவில் கல்விக்கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகளாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
இதில், ஒரு இளம் ஆசிரியராக தனுஷ், அட்டகாசமாக நடித்திருக்கிறார். சோழவரம் கிராம மாணவர்களுக்கு கணிதப்பாடம் மட்டுமல்ல, சமூக நீதிப்பாடமும் நடத்தி சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதும் அருமை. உயிரியல் ஆசிரியையாக வரும் சம்யுக்தா, ஏன் டா இந்த டீச்சரை பார்ப்பவதற்காகவாவது தினமும் ஸ்கூலுக்கு வரமாட்டீங்களாடா என்று நினைக்க வைக்கிறார்.
சோழவரம் கிராமத்து தலைவராக சாய் குமார், கல்விக்கு எதிரானவராகவே இருந்து கடைசியில் திருந்துகிறார். இவரை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பயன்படுத்தியிருக்கலாம்.
தரமான கல்வி, இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல இடங்களில் இன்னும் சென்று சேராமல் தான் இருக்கிறது அல்லது பல கோடி மாணாக்கர்களுக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது என்பது வேதனையான உண்மை. அந்தவகையில், பல காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும், வாத்தி கதையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். என்னைக்கேட்டால், கல்வி என்பதை உலகப்பொதுவுடைமை ஆக்கவேண்டும் என்று வலியுறுத்துவேன்.
திராவிட லேபிள் ஒட்டப்படாத ஆந்திர இயக்குநராக இருப்பதால் பாடசாலையில் சரஸ்வதி படம் மற்றும் நமது ஆன்மீக அடையாளங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். இதுவே, நம்மாட்களாக இருந்தால் பின்னணியில் யார் படம் மாட்டப்பட்டிருக்கும், யாரோட சிலை இருக்கும் என்பதை பச்சைக்குழந்தைகள் கூட அறிந்திருக்கும்.
தொழில் நுட்ப ரீதியாக, ஜீவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் பாடல்களுக்கான இசையும் மிகவும் ரசிக்கும் படி அமைந்திருக்கிறது, வாத்தி படத்தில். ஜெ யுவராஜின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வாகை சூடவா, சாட்டை சாயலில் இருந்தாலும் 6 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு காரணங்களால் மாணவர்களின் இடை நிற்றல் அதிக எண்ணிக்கையில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பால்வாடி சேரும் ஒவ்வொரு மாணவரும் பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டுதான் வெளியே வரவேண்டும் என்கிற நிலை வரும் வரை வாத்தி போன்ற படங்கள் வெளிவந்துகொண்டு இருக்கத்தான் வேண்டும்.
ஏனென்றால்,
எதையும் விட, கல்வி முக்கியம் குழந்தைகளே!