a K.Vijay Anandh review
படிப்பு என்பது நம் தேவை மட்டுமல்ல, .அது ஒவ்வொரு மாணவர்களின் உரிமை, குறிப்பாக தகுதியுள்ள மாணவர்களுக்கு மேற்படிப்பு கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும் என்பதை ஆக்ஷன் மற்றும் சைபர் கிரைம் கலந்து அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்கள், காலேஜ் ரோடில்.
30 வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ஜெண்டில்மேன் படத்தின் இன்னொரு கிளாசிக் மற்றும் 2.0 வேர்ஷனாக காலேஜ் ரோடு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. படத்தின் மையக்கரு கிட்டத்தட்ட ஒன்றுதான். அதில், நல்ல மதிப்பெண் இருந்தும் மருத்துவ கல்விக்கான சீட் கிடைக்காமல் சாகும் நண்பனும் அவனது அம்மாவும். அதனையடுத்து, முறைகேடாக சொத்து சேர்த்திருப்பவர்களிடம் அடித்து பிடுங்கும் அப்பளம் விற்கும் அப்பாவி அர்ஜுன். இதில், கல்விக்கடன் திரும்பச்செலுத்தாதவர்களை வங்கி நிர்வாகம் பேனர் அடித்து அசிங்கப்படுத்த தற்கொலை செய்துகொள்ளும் நண்பனின் குடும்பம். அதனால், தனது நுண்ணறிவை, சில தவறானவர்களின் வழி நடத்தலால் வங்கிக்கொள்ளைக்கு பயன்படுத்தும் நாயகன், லிங்கேஷ். இதில், நாயகன் லிங்கேஷ் மிகப்பெரிய கொள்ளை ஒன்றை முடித்துவிட்டு, நண்பனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன்னுயிரையும் மாய்த்துக்கொள்வது எதிர்பாராத நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸ்.
கிராமத்து பையனாகவும், நவ நாகரீக மாணவனாகவும் பெரிய ஒப்பனை இன்றி உடல்மொழியிலேயே அட்டகாசமான வேறுபாட்டை காண்பிக்கிறார் லிங்கேஷ். இன்று பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் அனைவருக்கும் அவர்களது ஆரம்பகாலகட்டத்தில் ஏதாவது ஒரு படம் திருப்புமுனையாக அமைந்திருக்கும். சந்தேகமே இல்லாமல் லிங்கேஷுக்கு காலேஜ் ரோடு திருப்பு முனையாக அமையும். அந்தளவிற்கு, ஒரு அறிவான மாணவன் , அழகான காதலன், நண்பர்களின் பாசத்திற்கு கட்டுப்பட்ட கிராமத்து இளைஞன் என்று பல்வேறு பரிணாமங்களில் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
மோனிகா அழகான நாயகியாக வந்து வசீகரித்திருக்கிறார். லிங்கேஷின் விடுதி தோழர் ஆனந்த் நாக்கின் மேல், லேசான சந்தேகத்தை விதைத்துவிட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அவரை நல்லவராக காட்டியிருக்கும் டிவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. அக்ஷய் கமல் மற்றும் அன்சாரின் கல்லூரி கலாட்டாக்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைத்திருக்கலாம்.
ஆப்ரோவின் இசையில் அனைத்து பாடல்களுமே இனிமையாக இருக்கின்றன. கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்றி, திறமையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலேஜ் செல்லும் ரோட்டை திறந்துவையுங்கள், கட்டமுடியாத கட்டணம் என்கிற டோல்கேட்டை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்தியிருக்கும் கால்ஜே ரோடு ஆண்டின் இறுதியில் வெளியாகியிருக்கும் அற்புதமான படம் என்றால் மிகையாகாது. இயக்குநர் ஜெய் அமர் சிங்கிற்கு பாராட்டுகள்!