a K.Vijay Anandh review
டியர் டெத், பார்த்த பிறகு ஒன்று தெளிவாக புரிகிறது. சாவு நம்மை எப்பொழுதுமே துரத்துவதில்லை, எமன் நம்மை எப்பொழுது பார்க்கவேண்டுமோ பார்க்கும் போது பார்த்துக்கொள்வான். நாம் தான், பல்வேறு காரணங்களால் அவசரப்பட்டு அவனை பார்க்கச்சென்று விடுகிறோம், நமது தவறால் நம்மை சுற்றியிருப்பவர்களையும் வலுக்கட்டாயமாக அனுப்பிவிடுகிறோம்.
வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட காதலன், கொரானாவால் தன் மனைவியை பறிகொடுக்கிறான். கொரானா வைரஸை அனுப்பியது என்ன எமனா..?
வீட்டில் இருப்பவர்களின் வயோதிகமும், நோய்த்தாக்கமும் அவர்களை படுத்த படுக்கையாக்கிவிடுகிறது. அடுத்ததலைமுறையின் முன்னேற்றத்திற்கு படிக்கல்லாக இருந்தவர்கள், ஒரு கடட்த்தில் அவர்களுக்கே சுமையாகவும் ஆகிவிடுகிறார்கள். தனது கஷ்டமான நிலையிலும் தனக்கு பணிவிடை செய்யும் மகனுக்கு, ஓய்வுகொடுப்பதா..? அல்லது, தன்னை சுமையாக கருதி எரிந்துவிழும் பேரனின் வசுவுகளை மேலும் தாங்கிக்கொள்ள முடியவில்லையா..? சாகுற வயசா..? 90 வயதில் எமனை சந்திக்கச்சென்றுவிடுகிறார்.
முத்தமிழின் வாழ்க்கையில், நீண்ட நாட்களுக்கு பிறக்கும் குழந்தை அவரது புகைப்பழக்கத்தினால் கேன்சர் தாக்கி இறக்கும் என்று நினைக்கும் போது, Expired ஆன ஒரு குளிர்பானம் குடித்து இறக்கிறாள். எக்ஸ்பெயர்ட் ஆன குளிர்பானத்தை விற்றது யார் தவறு..? எமனின் தவறா..? அல்லது மனைவிக்கு தெரியாமல் காசுகொடுத்து அதை வாங்கிகுடிக்க காரணமாக இருந்த முத்தமிழின் தவறா..? அல்லது எமனின் தவறா..?
இளம் வயது, நல்ல குடும்ப சூழல் பார்டி அது இதுவென்று நண்பர்களுடன் கும்மாளம் அடித்துவிட்டு, இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்து மரணத்தை தேடிக்கொள்கிறான் முப்பதுக்குள் ஒருவன். பார்டி வைச்சு சரக்கு வாங்கி கொடுத்தது, எமனா..?
எமன் என்கிற உருவம் கொடுக்காமல், ஒரு மத்த்திற்குள் அடக்கிவிடாமல் சாவு என்பதற்கு ஒரு உருவம் கொடுத்து கதையை சொல்லிய விதத்தில், எழுத்தாளர் ஸ்ரீதர் வெங்கடேசனையும் ஒரு ஆவணப்படத்திற்கான கதையை ஜனரஞ்சகமாக இயக்கிய வித்த்தில் இயக்குநர் பிரேம்குமாரையும் இப்படி ஒரு அழகான யதார்த்தம் திரைக்கு வர உதவிய தயாரிப்பாளர் சதீஷ் நாகராஜனையும் பாராட்டலாம்.
கும்பிடும் சாமிகள் வேறாக இருந்தாலும், சாவு ஒன்றுதானே, எல்லோருக்கும் பொதுவானது! அந்த சாவின் உருவமாக வரும் சந்தோஷ் பிரதாபையும் பாராட்டியே ஆகவேண்டும். இந்த கதாபாத்திரம் சும்மா வந்துபோவதல்ல, நிறைய சிந்திக்க வைப்பது. ஆம், சாவும் வாழ்க்கையும் வெவ்வேறல்ல, அழகான வாழ்க்கையின் நிறைவு தான் சாவு. உலகின் 800 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையில் அந்த நிறைவை தொடுபவர்கள், வெகுசிலரே! மற்றவர்களெல்லோரும், அவசரப்பட்டு சாவைத்தேடி ஓடுபவர்களே அல்லது பிறரையும் ஓடவைப்பவர்களே!
டியர் டெத், சாவு அழகானது அதுவாக வரும்போது!