a K.Vijay Anandh review
கன்னட மண்ணிலிருந்து வெளியாகியிருக்கும் அடுத்த சிறந்த திரைப்படம், விஜயானந்த் உலகில் அதிகமான இளைஞர்கள் கொண்ட நாடு நமது இந்தியா என்கிற வகையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் கொடுக்கும் படியாக வந்திருக்கும் பயோபிக் எனப்படும் சுயசரிதை சினிமா.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
வட கர்நாடகத்தின் நிஜ தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வர் பற்றிய சினிமாவாக விஜயானந்த் வெளியாகியிருக்கிறது. ஒரு பயோபிக் திரைப்படம் வழக்கமாக ஒரு ஆவணப்படம் போலத்தான் இருக்கும் என்கிற மாயையை உடைத்து விறுவிறுப்பான ஒரு வணிக சினிமாவாக எழுதி – இயக்கியிருக்கிறார் ரிஷிகா சர்மா.
எந்த ஒரு சாம்ராஜ்யமும், சவால்களை சந்தித்தால் மட்டுமே கட்டியமைக்கப்படும், உருவாக முடியும். தானுண்டு தன்னுடைய பிரிண்டிங் பிரஸ் உண்டு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய் சங்கேஸ்வர், லாரி ஓட்ட வருகிறார். உள்ளூர் சந்தையே ஆனாலும், வாய்ப்பு அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை. நண்பனின் துணை, பெரிய மனிதரின் துணையென்று கிடைத்த முதல் வாய்ப்பையே கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு, ஒரு லாரியாக இருந்ததை 6 லாரிகளாக்கி அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் கொண்ட சாம்ராஜ்யமாக வி ஆர் எல் நிறுவனத்தை மாற்றுகிறார்.
தனது பெயரான விஜய் மற்றும் தனது மகன் பெயரான ஆனந்த் ஆகியவற்றை இணைத்து விஜயானந்த் ரோட்வேஸாக ஆரம்பிப்பதிலிருந்து, விஜய் சங்கேஸ்வர்ரின் அர்ப்பணிப்பும் அளவிடமுடியாத தன்னம்பிக்கையுடன் கூடிய விடா முயற்சியும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
என்னதான், வேறு துறையில் சாதித்தாலும் பிரிண்டிங் என்பது அவரது ரத்தத்தில் ஊறினதாயிற்றே, தன்னையும் தனது நிறுவனத்தையும் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ராமராவை எதிர்த்து விசேஷ கர்நாடகா எனும் தினசரியை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் சக்கை போடு போட வைக்கிறார். ஒரு கட்டத்தில் அதனை 200 கோடிக்கு விற்றாலும், விஜயவாணி என்கிற பெயரை இன்னொரு சாதாரண பத்திரிகையாசிரியரிடம் வாங்கி அதையும் வெற்றிகரமாக நடத்துகிறார்.
நடுவே, பாரதிய ஜனதா கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினராகி மக்கள் சேவை ஆற்றுகிறார்.
இன்று வாழும் சாட்சிகளாக விஜய சங்கேஸ்வரரும் அவரது மகன் ஆன்ந்த் சங்கேஸ்வரரும் கன்னட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்து கொண்டிருப்பதுடன், பல ஆயிரம் குடும்பங்களை வேலைவாய்ப்புகள் மூலம் வாழவைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
படத்தில், விஜய் சங்கேஸ்வரராக நிஹாலும் ஆனந்த் சங்கேஸ்வரராக பாரத் போபன்னாவும் அற்புதமாக நிஜ கதாபாத்திரங்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.
மதுரகவியின் தமிழாக்கம், இன்னொரு அற்புதமான தமிழ்ப்படம் பார்ப்பது போன்றே ரசிகர்களை பிரமிக்கவைத்திருக்கிறது.
பொழுதை தற்காலிகமாக போக்க பொழுதுபோக்கு படங்களை பாருங்கள், பொழுதை நன்றாக ஆக்க, இதுபோன்ற தன்னம்பிக்கை தரும் சுயசரிதை படங்களை பாருங்கள்.
வெற்றியும் மகிழ்ச்சியும் ஒருங்கே அமைந்த சுயசரிதை, விஜயானந்த்.