a K.Vijay Anandh review
பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்த 5 பேர் வேண்டும், நரபலி நடக்கவேண்டும் அப்பொழுதுதான் புதையலை அடைய முடியும் என்கிற நிபந்தனை வேறு!
சேட்டைக்கார ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் லூட்டி அடிக்க அதனை தொடர்ந்து அவர்கள் மீது ஊர் நடவடிக்கை எடுக்க அவர்கள் கோபித்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி காட்டிற்குள் தானாகவே புதையல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள்.
இன்னொரு பக்கம், காட்டிற்குள் பதுங்கிய தீவிரவாதிகளை வேட்டையாட களம் இறங்குகிறது இந்திய ராணுவத்தின் கமாண்டோ படை.
இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து அட்டகாசமான படமாக செஞ்சியை இயக்கியிருக்கிறார் கணேஷ் சந்திரசேகர். இவர்தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நமது பாரம்பரியமான ஆலயங்கள், ஆன்மீகம் தொடர்பான விஷயங்களை காட்டிய வித்த்திலும் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கண்ணியமான காட்சிகள் அமைத்திருக்கும் விதத்திலும் இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யாவும் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களும் மாஸ்டர். சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த் மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா ஆகியோரின் சுட்டித்தனமும் சாகச பயணமும் ரசிக்க வைக்கின்றன. .தங்கப் புதையலைக் கண்டுபிடித்த பிறகு பாடும் இது தங்கம் என்கிற பாடல் அட்டக்காசம், இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் க்கு பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவின் கேமரா, செஞ்சி கோட்டை, கல்லார் காட்டுப்பகுதிகள் ஆகியவற்றை சிறப்பாக படம்பிடித்திருக்கிறது. நம்மை ஒரு புதையல் வேட்டைக்கு அழைத்து சென்ற அனுபவத்தை கொடுக்கிறது.
செஞ்சி, புதையலை தேடும் சாகசப்பயணம் – குழந்தைகளுடன் ரசிகர்களும் இணைவார்கள்.