a K.Vijay Anandh review
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
கோரமான முகமூடியை விட சில மனிதர்களின் புன்னகை ஆபத்தானது என்கிற ஒற்றை வரிக்குள், விறுவிறுப்பான திரில்லர் படமாக மிரளை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எம் சக்திவேல்.
படம் முழுவதும் இடம்பெற்றிருக்கும் வசன்ங்களை மொத்தமாகவே ஒரு 10-15 பக்கங்களுக்குள் அடக்கிவிடலாம் போல, காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கும் Description தான் முழுத்திரைக்கதையும். அந்தளவுக்கு நடிகர்களின் உணர்ச்சிகள், உடல்மொழிகள், நடிப்புகள் இவற்றுடன் சுரேஷ் பாலாவின் கேமரா கோணங்கள், கலைவாணனின் எடிட்டிங் மற்றும் பிரசாத் எஸ் என்னின் பின்னணி இசை ஆகியவற்றை கொண்டே ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைக்கதையாக மிரளை கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆர்ட் டைரக்டர் மணிகண்டன் சீனிவாசனும் கதையோட்டத்திற்கு உரமூட்டியிருக்கிறார்.
உதாரணத்திற்கு, இடைவேளைக்கு பிறகு தன் மனைவி வாணிபோஜன் மற்றும் மகன் அங்கித் ஆகியோருன் காரையும் காணாமல் தவிக்கும் பரத்தின் – அந்த 20-25 நிமிடங்கள் – அவர் மட்டுமே – அந்த அத்துவான காட்டு கும்மிருளில் – நவீன பூதங்களாக மிரட்டும் அந்த பிரமாண்டமான காற்றாலைகளின் மத்தியில் – ஒரு பயத்தோடு பரிதவிக்கும் காட்சிகள் செம்ம.
ஒரு இருட்டு ஏதோ ஒரு காடு என்று இல்லாமல், பிரமாண்டமான அந்த காற்றாலைகள் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்திருப்பதே ஒரு புதிய சிந்தனைதான்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக கே எஸ் ரவிக்குமார், கூகுள் குட்டப்பாவிற்கு பிறகு முற்றிலும் மாறுபட்ட கம்பீரமான கதாபாத்திரம். சொல்லிக்கொள்ளாமல் மருமகனாகிப்போன பரத்தை ஏற்றுக்கொண்டு தனது சொந்த மருமகன் அர்ஜயை மிரட்டும் காட்சிகளில் – இவரைத்தவிர வேறு யாரையும் யோசிக்க முடியாதவாறு நடிக்கிறார்.
பரத், சமீப காலமாகவே சிறந்த கதையம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களுக்கு தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். நல்ல கதைக்குள் நாம் இருக்கவேண்டும் என்று நினைத்துவிடுவதே நல்ல நடிகனுக்குண்டான இலக்கணம். அதை கப்பென்று பிடித்துக்கொண்டு, புதிய இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
வாணிபோஜன் – காவ்யா அறிவுமணி ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனக்கு காமெடி மட்டுமல்ல, இதுவும் நல்லாவே வரும் என்று மிரட்டியிருக்கிறார் ராஜ்குமார்.
மிரள், மிகவும் நிதானமாக ஆரம்பித்து வேகத்தின் உச்சத்தை தொடும் ஒரு திரில்லர் பயணம், அனுபவியுங்கள்!