a K.Vijay Anandh review
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank you
ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு அட்டகாசமான திரைக்கதை அமைப்பதில், என்றுமே நாங்கள் கிங்தான் என்று மலையாள திரையுலகம் காலரைத்தூக்கிக்கொள்வது போன்ற ஒரு படம் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்.
மலையாளத்தில் தான் வெளியாகியிருக்கிறது, ஆங்கில சப் டைட்டில்கள் இருந்தாலும் அதை படித்துதான் வசன்ங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்கிற சங்கடம் இல்லாமல் மலையாளமும் ஆங்கிலமும் தெரியாவிட்டாலும் இப்படத்தை முழுமையாக புரிந்துகொண்டு ரசிக்கமுடியும். அந்தளவுக்கு எளிமையான வசனங்கள் மற்றும் சிறப்பான காட்சியமைப்புகள்.
கருப்பு கோட் போட்ட சாதாரண ஒரு வக்கீலென்றால், அன்றாட செலவுகளுக்கு வேண்டுமானால் கல்லாக்கட்டிக்கொண்டிருக்கலாம். கூடவே கொஞ்சம் கிரிமினல் புத்தியும் சேர்ந்துகொண்டால், எந்த முதலீடும் இல்லாமல் கோடீஸ்வரனாக ஆகலாம் என்பதற்கு இப்படத்தில் வரும் முகுந்தன் உன்னி கதாபாத்திரமே சாட்சி.
அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு , குறுக்கே வருபவர்களையெல்லாம் அடித்து தூக்கி மேலே ஏறிக்கொண்டே இருக்கு முகுந்தன் உன்னி கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் வினித் ஸ்ரீனிவாசன்.
அவருக்கு ஒரு இன்ஷ்பிரேசனாக வரும், சூரஜ் வெஞ்சார மூடும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சட்ட நுணுக்கங்களை நன்கு தெரிந்துகொண்டு, விபத்து காப்பீட்டிற்குள் வரும் காவலர் – மருத்துவர் முக்கியமாக விபத்தில் மாட்டிக்கொண்டவர்கள் ஆகியோரை லாவகமாக கையாண்டு, காப்பீட்டுத்துறை அதிகாரிகளின் கரிசனமும் சேர்ந்துகொண்டால் – என்னவெல்லாம் செய்து பொருளீட்டலாம் என்பதை காட்சிகளாக பார்க்கும் போது, என்ன மாதிரியான ஒரு சமூக கட்டமைப்புக்குள் சிக்குண்டு கிடக்கிறோம் என்பது நம்மை பயமுறுத்தும்.
சரி இதெல்லாம் நேர்மையான வழியா..? என்று நமது சார்பாக தன்வி ராம் கேட்கும் போது, மீனாட்சியாக வரும் அர்ஷா சாந்தினி பைஜு சொல்லும் பதில் மிகவும் யதார்த்தம். முன்னேறுவதற்கு முயற்சியும் கடின உழைப்பும் மட்டும் போதாது போல, அதையும் தாண்டி கொஞ்சம் கிரிமினல் மூளையும் தேவைப்படுகிறது.
எது சரி..? எது தவறு..? என்று முடிவெடுக்க வேண்டியது, அவரவர் கைகளில் இல்லை இல்லை மூளையில் இருக்கிறது.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ், அட்டகாசமான இன்ஷுரன்ஸ் கிரைம் திரில்லர், பார்க்கத்தவறாதீர்கள்!
இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக்கிற்கும் தமிழகத்தில் வெளியிட்டிருக்கும் ஜியாண்ட் பிலிம்ஸ் வினீஷிற்கும் பாராட்டுகள்!