a K.Vijay Anandh review
ஒரு கட்டத்தில் அழகான மனைவி சம்யுக்தா குழந்தையுடன் ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டுகதரில் ஜீவா, அம்ரிதா ஐயரால் துரத்தி துரத்தி காதலிக்கப்படும் ஜெய் – இன்னொரு கட்டத்தில், இந்த மூவருமே தனிமரமாக.. இந்த இரண்டு தருணங்களுக்கு இடையில் நடக்கும் காதல், காமெடி கலாட்டாக்கள் தான் காபி வித் காதல்.
ஒரு படைப்பாளி இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதே சமயம், தன்னுடைய அதே பாணி காமெடி காதல் கலாட்டா திரைக்கதை உக்தியுடன் வெற்றிகரமாக பயணிக்கமுடியுமா..? சுந்தர் சி அதற்கு மிகப்பெரிய உதாரணம். கவாஸ்கரின் சாதனையை சச்சினும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலியும், கோலியின் சாதனையை சூர்யகுமாரும் முறியடிப்பது போல.
கே பாக்யராஜுக்கு இருக்கும் திரைக்கதை ஜாம்பவான் பட்டத்தை பங்கு போட இன்றைய தேதியில் – நீண்ட பயணத்தின் அடிப்படையில் – தகுதியான ஒரே இயக்குநர் சுந்தர் சி என்றால் அது மிகையல்ல.
ஒரு வண்டியை கிளப்பும் போது ஒவ்வொரு கியர்களாக மாற்றி வேகத்தின் உச்சமான டாப் கியரை தொடுவது போல, படம் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்க வைத்து மேரியேஜ் பிளானர் யோகி பாபு – ரெடின் கிங்ஸ்லி கூட்டணியை வைத்து இடைவேளைக்கு முன் ஒரு வெடிச்சிரிப்பு சிரிக்க வைத்துவிடுகிறார், ரசிகர்களை.
இடைவேளைக்கு பிறகு, ஒவ்வொருவரும் தன்னை உண்மையாக நேசிக்கும் பெண்களுடன் இணைகிறார்களா என்பதை மிகவும் சுவராஸ்யமாக சொல்லிவிடுகிறார்கள்.
படத்தை பற்றிய செய்திகளில் சொல்லப்பட்டது போல, திவ்ய தர்ஷினி தான் அத்தனை பேருக்கு ஆறுதல் சொல்லி அத்தனை பேரையும் இணைத்து படத்தை சுபமாக முடிக்க உதவுகிறார். அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக வீட்டிற்குள் இருந்துகொண்டே! அவரால் முடியாத ஒன்றை, ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும் அவரது கணவர் முடித்து படத்திற்கு சுபம் போட உதவுகிறார்.
நண்பன் படத்தில் பார்த்த அந்த மூன்று பேரில், விஜய்க்கு பதிலாக ஜெய். இது ஏதாச்சையாக அமைந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும், ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோரை ஒரே வீட்டிற்குள் பிரதாப் போத்தனின் மகன்களாக பார்க்கும் போது ஒரு சுவராஸ்யம் தொற்றிக்கொள்ளாமல் இல்லை.
பிரதாப் போத்தன் ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்த திருப்தியுடன், வானுலகில் ஓய்வெடுக்கக்கூடும். அடியாளாகவே பார்த்து பழக்கப்பட்ட விச்சு விஸ்வநாத், ஹீரோவின் மாமனாராக புரொமோட் செய்யப்பட்டு அதில் அட்டகாசமாக பொருந்தியும் இருக்கிறார்.
ஜீவாவுடன் ஜோடி சேரும் மாளவிகா சர்மாவும் அழகு! ரைசா வில்சன் கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறார்.
கதாநாயகிகளை கவர்ச்சியாக காட்டியிருந்தாலும், ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு ஒரு கண்ணியம் சேர்த்திருக்கிறார்கள்.
என்னதான் பெரிய குடும்பமாக இருந்தாலும், ஒரு குழந்தை இருந்தால் தான் முழுமையாக அழகாக இருக்கும். அப்படி ஒரு குழந்தையை வைத்தே அழகான கிளைமாக்ஸ், அதுவும் யாருமே எதிர்பாராத மாளவிகா சர்மாவின் கோரியோகிராப் – குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகளுக்கு அழகான முற்றுப்புள்ளி வைக்கிறது. அருமையான சிந்தனை – காட்சியமைப்பு.
சுந்தர் சி, காதல், காமெடி, கலாட்டா திரைக்கதையில் ஒரு மாஸ்டர்.
காபி வித் காதல்- Book ticket with Family குடும்பத்தோடு பார்த்து மகிழுங்கள்!