a K.Vijay Anandh review
இங்கிலாந்து, பல நூறு ஆண்டுகளாக தந்திரமாக தங்களது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த ஆட்சி செய்ததோடு மட்டுமல்லாமல் அந்தந்த நாட்டின் வளங்களை உறிஞ்சி எடுத்துவிட்டு சக்கையாக சுதந்திரம் கொடுத்துச் சென்ற நாடுகளிடம் இது வரை மன்னிப்பு கேட்டதில்லை. இங்கிலாந்து மன்னிப்பு கேட்கவேண்டும், கொள்ளையடித்த செல்வங்களை திருப்பி கொடுக்கவேண்டும் என்கிற பேச்சு இப்பொழுது அது ஆட்சி செய்த நாட்டு மக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.
இயக்குநர் அனுதீப்பிற்கும் அந்த எண்ணம் ஏற்பட்டிருக்கவேண்டும். பிரின்ஸ் படத்தின் கதாநாயகி – யுனைட்டட் கிங்டத்தை சேர்ந்த கதாபாத்திரமாக காட்டி – அவர் மூலம் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்.
சொந்தபந்தம் – சாதிசனம் இதிலிருந்து மட்டும் யாரையும் காதலிச்சுத்தொலைச்சுராத என்று வித்தியாசமான கண்டிசன் போடும் அப்பா சத்யராஜ், சொந்த மருமகனை காதலித்து கைப்பிடித்ததற்காக பெற்ற மகளையே ஒதுக்கி வைக்கும் வித்தியாசமான ஊர்ப்பெரிய மனுஷன்.
ஆசிரியராக தான் எடுக்கும் சமூக அறிவியல் பாடத்தில் கூட கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு – புதிதாக வந்த யுகே ஆசிரியை மரியாவை விரட்டி விரட்டி காதலிக்கும் சிவகார்த்திகேயன். நடை உடை பாவனைகளில் தான் நிஜமாவே பிரின்ஸ் தான் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அப்பா சத்யராஜ், காதலி மரியா, நண்பர்கள் பரத்- கோகுல் மற்றும் வெள்ளைக்கார மாமனார் – முகம் தெரியாத சகலை என்று அவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கமுடிகிறது.
மகன் அப்படி என்றால், ஆ ஊன்னா அரிவாளை எடுத்து ஊர்க்காரர்கள் கையை கிழித்து இரத்த ஒற்றுமை பாடம் எடுக்கும் அப்பா சத்யராஜ் அடிக்கும் லூட்டி இன்னொருபக்கம் நகைச்சுவை விருந்து.
அப்போ, பிரேம்ஜி..? அட்டைப்பூச்சி சைஸ்ல உடம்பை வைத்துக்கொண்டு டக் இன் செய்து கொண்டு ஊர்க்காரர்களின் நிலத்தை ஆட்டையைப்போடும் லோக்கல் ரெளடியாக வந்து, நகைச்சுவையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். காலைல எழுந்திருக்க முடில பக்குபக்குனு இருக்கு என்று சொல்லும் ஒரு ஆளிடம் அப்போ எழுந்திருக்காம பண்ணிருவோமா என்று கேட்கும் போதிலிருந்து எதுவுமே தெரியாத சத்யராஜுக்கு சகல மரியாதைகளையும் வாங்கிக்கொடுப்பது வரை அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவிலேயே – அதுவும் தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்து தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் நாயகியாக மரியா – சிறப்பாக நடித்திருப்பதோடு அட்டகாசமாக நடனமும் ஆடியிருக்கிறார் – தமிழ் சினிமா நாயகிகள் போலவே!
லோக்கல் சேனலுக்காக, பேட்டியெடுக்கும் ரஞ்சித்திலிருந்து பேட்டிகொடுக்கும் ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட ஊர்க்காரர்கள் வரை அத்தனை பேரும் நகைச்சுவைக்கு உதவியிருக்கிறார்கள்.
நாடுகளுக்கிடையே போர் வேண்டாமே என்கிற எண்ணம் இயல்பாகவே நமக்குள் ஒட்டிக்கொள்கிறது, படம் முடிந்து வெளியே வரும் போது!
பிரின்ஸ், ஜாலியாக கதை சொல்லி தேசப்பற்றையும் அதைவிட அதிகமாக மன்னிப்போம் மறப்போம் அரவணைப்போம் என்கிற மனித நேயத்தையும் விதைத்திருக்கும் படம்!