a K.Vijay Anandh review
நீங்க என்னைக்காவது தப்பிக்க முயற்சி செஞ்சுருக்கீங்களா..? என்று கேட்கும் பிரியாவின் கேள்வி படம் முடிந்துவெளியே வந்தபிறகும் நம் காதில் எதிரொலித்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சக்திவாய்ந்த கேள்வி, அதுவும் சிறையில் அடைபட்டிருக்கும் சிறுகுழந்தைகளிடம்.
குழந்தைகளை கூட விட்டுவைக்காமல், அதில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுமி, இவய்ங்க பொம்பள பொம்மையை கூட விடமாட்டாய்ங்க என்று சொல்லும் போது நமது சமூகம் எவ்வளவு கேவலமான நிலையில் இருக்கிறது என்று நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கிறது.
ஜார்ஜ் விஜய், என்கிற பாவபுண்ணியம் பார்க்காத கொடூர வில்லனிடமிருந்து அந்த சிறுமிகள் தப்பித்தார்களா என்பதே விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.
நம்மை காப்பாற்ற யாரோ ஒருவர் வருவார் என்று எதிர்பார்த்து கொண்டு முயலாமல் இருப்பதை விட தப்பிககதானாக முதலடி எடுத்து வைக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கும் விதத்தில் இயக்குநர் கல்யாண் நமது குழந்தைகளுக்கு அற்புதமான அறிவுரையொன்றை வழஙகியிருக்கிறார். அந்த அறிவுரையின் சக்தி மகத்தானது.
பல கோடி ரூ செலவில் ஆய்வுக்கூடம், பெரிய பெரிய இயந்திரங்கள் என்று இல்லாமல் ஒரு ஷூவுக்குள் டைம் மிஷினை வைத்த அந்த சிந்தனை பாராட்டுக்குரியது. அதன் கண்டுபிடிப்பாளராக வரும் திலீபனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. சிறப்பாக நடித்து பெயர் வாங்கிவிடுகிறார்.
அதற்கு முன்பாக ஒரு பழைய ஷூவை தொலைத்து விட்டு யோகிபாபு, பாலா, கிங்ஸ்லி ஆகியோரின் நகைச்சுவை முதல் பாதியை நகர்த்துகிறது.
என்னது..? டாஸ்மாக் போர்டில் கல்லெறிகிற காட்சி அதுவும் தமிழ் சினிமாவில், அதுவும் இந்த நேரத்தில்... தயாரிப்பாளரும் இயக்குநரும் தைரியமான ஆட்கள் தான் யா , உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
குடிபோதை, எப்படி ஒரு அப்பாவி பெண்ணை காவுவாங்குகிறது..? ஒரு குழந்தையை பிறக்கும் போதே தாயில்லாத குழந்தையாக ஆக்குகிறது..? அது வளர்ந்த பின்னும், அவள் அப்பனின் குடிபோதை அவளை சிறுமியாக இருக்கும் போதே குடிக்காசுக்காக விபச்சாரத்தில் தள்ளப்பார்க்கிறது என்பன போன்ற சமூகச்சீர்கேடுகளை துணிந்து காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கல்யாணுக்கு இந்த சமூகம் பெரிய கடமைப்பட்டிருக்கிறது.
ஷு, சமூக அவலத்தை தோலுரிக்கும் எளிமையான அதேநேரம் வலிமையான ஆயுதம்!