a K.Vijay Anandh review
முன்குறிப்பு
- அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை நான் படித்திருக்கவில்லை.
- இந்த விமர்சனம் மணிரத்னம், ஜெயமோகன், குமாரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதி மணிரத்னம் இயக்கி வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கானது.
- தமிழ் நிலத்தை ஆண்ட நமது மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் தனித்தனியாக பாரத கண்டத்தின் பெரும்பாலான அரசர்களை வீழ்த்தி பேர்ரசர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றார்ப்போல் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவரால் வீழ்த்தப்பட்டும் இருக்கிறார்கள். பொன்னியின் செல்வனில் , சுந்தரராஜசோழன் காலகட்டத்தில் பாண்டிய மன்ன்ன் வீரபாண்டியன் ஆதித்ய கரிகாலசோழனால் வீழ்த்தப்படுகிறான். அதற்கு பழிவாங்க, சோழவம்சத்தை கருவறுக்க பாண்டிய மன்ன்னின் படைகள் ரகசியமாக சோழர்களை விரட்டுகிறார்கள். இந்த சோழர்கள் கதையில் இயல்பாகவே பாண்டியர்கள் வில்லன்களாக ஆகிப்போகிறார்கள். அதற்காக, மதுரைக்கு அந்தப்பக்கம் இருக்கும் தற்போதைய திரைப்பட ரசிகர்கள் இப்படத்தை வெறுக்க வேண்டுமென்பதில்லை.
விமர்சனம்
திடீரென்று இடதுசாரி கருமேகம் சூழ்ந்துவிட்ட தமிழ்த்திரையுலகில், நமது மன்னர்களின் பெருமையை விளக்கும் வரலாற்று படங்கள் வராதா என்று பெரும்பாலான மக்கள் ஏங்கித்தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும், தமிழக மன்னர்களின் தீரத்தை மற்றவர்களுக்கும் பறைசாற்றும் விதமாகவும் வெளிவந்திருக்கிறது, அமரர் கல்கியின் நாவலை தழுவி மணிரத்னம், ஜெயமோகன், குமாரவேல் ஆகியோரால் திரைக்கதை அமைக்கப்பெற்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் – பாகம் 1 திரைப்படம்.
கமல்ஹாசனின் கம்பீர தமிழ் முன்னோட்டத்துடன் பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கிறது.
தஞ்சையை தலை நகராக கொண்ட சோழ சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் விதமாக வடதிசை நோக்கி பெரும்படையுடன் செல்லும் யாராலும் அடக்கமுடியாத மதயானையைப்போன்ற ஆதித்ய கரிகாலனின் கலிங்கம் வரையிலான தொடர்வெற்றிகளில் ஆரம்பித்து, இலங்கைக்கு சென்ற அவரது இளவல் அருண்மொழிவர்மன் ஐ திருப்பி தஞ்சைக்கு அழைக்கும் முயற்சியில் இவர்களின் சகோதரி குந்தவையால் அனுப்பிவைக்கப்பட்ட வந்தியத்தேவனோடு சேர்ந்து அருண்மொழிவர்மனும் கடலில் மூழ்கிப்போவதோடு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் முற்றுப்பெறுகிறது.
ஆதித்ய கரிகால சோழனை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கிறார் விக்ரம். போர்க்களத்தில் தனது குதிரையின் மீதமர்ந்து சீறிப்பாய்ந்து அறிமுமாகும் அந்த முதல் காட்சியிலேயே பிரமிப்பை அதிகரிக்கச்செய்திருக்கிறார்கள். அந்த பிரமிப்பு, படத்தின் இறுதிக்காட்சி வரை நீடிக்கிறது.
தனது காதலி நந்தினி செய்யும் துரோகத்தால் ஆதித்ய கரிகால சோழனுக்கு ஏற்படும் பெருங்கோபத்திற்கு பலியான சிற்றரசர்கள் பேர்ரசர்களை நினைத்தால் நமக்கே பரிதாபம் ஏற்படுகிறது. ந்ந்தினி மீதும் அவரை திருமணம் செய்து கொண்ட சோழ சாம்ராஜ்யத்தின் நிதி அமைச்சர் பெரிய பழுவேட்டரையர் மீதும் கொண்ட கோபத்தால், தஞ்சை மண்ணையே மிதிக்கமாட்டேன் என்று சபதம் செய்திருந்த ஆதித்ய கரிகால சோழன், தனது தம்பி அருண்மொழி வர்மனுக்கு ஏற்பட்ட அசம்பாவித்தால் ஏற்பட்ட ஆயிரமாயிடம் குழப்பங்களுடன் நந்தினி மீதும் பெருங்கோபம் கொண்டு தஞ்சைக்கு திரும்புகிறார். அவரை சாந்தப்படுத்திக்கொண்டே மலையமானும் உடன்வருகிறார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில், ஆதித்ய கரிகாலசோழனின் பங்கு மிகவும் குறைவுதான். போர்க்களங்களில் வெற்றிவாகை சூடுவதோடு, வந்தியத்தேவனுக்கு அடுத்த அசைன்மெண்ட் கொடுத்து அனுப்புவதோடு அவரது பங்கு முடிந்துவிடுகிறது.
ஆதித்ய கரிகால சோழனாக நடித்திருக்கும் விக்ரம், காதல் தோல்வியின் வலியும் ஆக்ரோஷமும் கலந்து புலிக்கொடியில் இருக்கும் புலிப்பாய்ச்சலில் நடித்திருக்கிறார். ஒப்பனைகள் ஒருபுறம், நிஜத்திற்கு அழைத்து செல்கிறது என்றால், திரையில் அவர் வெளிகாட்டும் உணர்ச்சிகள் நம்மை அவர் எதிரில் அமர்ந்து அதை அனுபவிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.
ஆதித்ய கரிகால சோழனின் கட்டளையை ஏற்று சோழ சாம்ராஜ்யத்திற்கு எதிராக பெரிய பழுவேட்டரையர் மற்றும் சில சிற்றரசர்கள் துணையுடன் பின்னப்படும் சதிவலைகளை கண்டுபிடித்து சக்ரவர்த்தி சுந்தர்ராஜ சோழனின் செவிக்கு கொண்டு செல்ல புறப்பட்டு வரும் வந்தியத்தேவனாக கார்த்தி. முதல் பாகத்தின் முதுகெலும்பு இவர் தான் என்று கூறலாம், அந்தளவுக்கு முழுக்கதையும் இவரை மையப்படுத்தியே நகர்கிறது. சந்திக்கும் பெண்களுடன் எல்லாம் லைட்டாக சபலம் அல்லது காதல் கொள்ளும் அழகு தனி என்றால், ஒரு பக்கம் ஆழ்வார்க்கடியான் நம்பி ஜெயராமனுடன் இவர் அடிக்கும் லூட்டி, சிறியபழுவேட்டரையரின் காவலிலிருந்து தப்பித்து ஓடும் ஒட்டம், நந்தினையை சந்தித்து அவரை புகழ்ந்து பேசும் இடம், குந்தைவையின் கட்டளையை ஏற்று அருண்மொழிவர்மனை அழைத்து வர இலங்கைக்கு படகில் செல்லும் போது படகோட்டி பூங்குழலியுடனான உரசல் என்று காட்சிக்கு காட்சி அட்டகாசப்படுத்தியிருக்கிறார். அருண்மொழிவர்மன் – ஜெயம் ரவி உடனான சண்டைக்காட்சியும் அற்புதமென்றால் இருவரும் இணைந்து ஆர்ப்பரிக்கும் படகில், பாண்டிய நாட்டை சேர்ந்த ரவிதாசன் – கிஷோர் ஆட்களுடன் போடும் சண்டைக்காட்சி மயிர்க்கூச்செரிய வைக்கும் ரகம்.
குந்தவையாக வரும் திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் இருவரும் பேரழகிகளாக மட்டுமல்லாமல், தங்களது தீர்க்கமான அறிவாலும் மிளிர்கிறார்கள்.
குந்தவையாக வரும் திரிஷா, பெரியபழுவேட்டரையர் சரத்குமாருடன் சேர்ந்து மதுராந்தகனுக்கு மணிமுடி தரிக்க திட்டமிடும் சிற்றரசர்களிடம் தனது சகோதரர்களுக்கு பெண் கேட்டு அவர்களின் சோழ மன்னருக்கு எதிரான மன நிலையை மாற்றும் இடம் அட்டகாசம்.
இன்னொருபக்கம், கொடிய விஷப்பாம்பே பேரழகியாக பிறந்திருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு, பெரிய பழுவேட்டரையரை கண்களால் கொத்தியே காலி செய்கிறார் நந்தினி ஐஸ்வர்யாராய்.
பெரிய பழுவேட்டரையர்ர் – சரத்குமார், கம்பீரமான உடல்மொழி கச்சிதமான நடிப்பு என்று அசத்திவிடுகிறார். இவரின் இளவல் தளபதி சிறிய பழுவேட்டரையராக வரும் பார்த்திபன், தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் அவரது அந்த குறும்புத்தனமான நடிப்பால் வசீகரித்துவிடுகிறார். அது வடிவேலுவுடன் காமெடி செய்யும் போதும் சரி, வந்தியத்தேவனிடம் காட்டும் திமிரான அந்த விசாரணையிலும் சரி!
நோய்வாய்ப்பட்ட சுந்தரராஜ சோழனாக, படுத்தபடுக்கையாய் கிடக்கும் நிலையிலும், பிரகாஷ்ராஜ் அட இந்தாளு வேற லெவல்ப்பா என்று ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார்.
இலங்கையின் ஆட்சி அதிகாரம் தங்கத்தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட போதும் அதை மறுக்கும் கம்பீர அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, இடைவேளைக்கு பிறகு வந்தியத்தேவனுடன் இணைந்து பொன்னியின் செல்வனை விறுவிறுப்பாக்கியிருக்கிறார். முகத்தில் ஒரு புன்னகை கலந்த சாந்தமும், முடிவெடுப்பதில் புலியின் வேகமுமாக அவர் காட்டியிருக்கும் உடல்மொழி அருமையோ அருமை.
படகோட்டி பூங்குழலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி, படகோட்டியாக சமுத்திர ராணி என்கிற அடைமொழியோடு, சாதாரண குடிமகளாக இருந்துகொண்டு ஒரு தலைப்பட்சமாக சோழ இளவரசன் அருண்மொழிவர்மனை காதலிக்கும் இடத்திலும் சரி ராஜ விசுவாசத்திலும் சரி கிடைத்த அந்த நல்வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார்.
அருண்மொழிவர்மனுக்காக காத்திருக்கும் வானதி – ஷோபிதா மட்டும் என்ன தக்காளி தொக்கா..? கயிற்றில் தொங்கிக்கொண்டு ஆடும் காட்சியிலும், குந்தவை கொடுத்த அசைன்மெண்டோடு வந்தியத்தேவனுக்கு தனியாக அவரும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்து அனுப்புவதிலுமாக அசத்தியிருக்கிறார்.
பெரியவேளாராக அருண்மொழிவர்மனுடன் வரும் பிரபுவிற்கும், பார்த்திபேந்திர பல்லவனாக ஆதியகரிகாலசோழனுடன் பயணிக்கும் விக்ரம் பிரபுவிற்கும் முதல் பாகத்தில் அவ்வளவாக ஸ்கோர் செய்ய இடமில்லையெனினும், அடுத்த பாகத்தில் இவர்கள் பெரும்பங்காற்றப்போகிறார்கள் என்பதை கட்டியம் கூறும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மதுராந்தகனாக ரஹ்மான், அவரது தாயார் செம்பியன் மாதேவியாக வரும் ஜெயச்சித்ரா ஆகியோரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சோழசாம்ராஜ்யத்தின் முதலமைச்சர் அனிருத்த பிரம்மராயராக மோகன் ராமன், பூக்கார சேந்தன் அமுதனாக வரும் அஸ்வின் ஆகியோர் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
நந்தினியின் பணிப்பெண்ணாக வரும் வினோதினி, பாண்டிய மன்னன் வீரபாண்டியனாக ஒரே காட்சியில் வந்துபோகும் நாசர் என்று பொன்னியின் செல்வனில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் எண்ணிக்கை படத்தில் வரும் காட்சிகளின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு நடிகருக்கு ஒரு காட்சி என்று வைத்தால் கூட நான்கைந்து மணி நேரத்தை முதல் பாகமே விழுங்கியிருக்கும்!
அப்படியே தொழில் நுட்பம் பக்கம் வருவோம்.
இசை ஏ ஆர் ரஹ்மான், பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றிபெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்திருந்த நிலையில், பின்னணி இசையில் மிகப்பெரியளவில் காட்சிகள் நம் இதயத்திற்குள் பட்டாப்போட்டுக்கொள்ளும் அளவிற்கு உழைத்திருக்கிறார், இசைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் இன்னொரு ஆஸ்கரை பெற்றுத்தரும் என்று நம்பலாம்.
இவரது இசையில் இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவா ஆன்ந்த் மற்றும் கிருத்திகா நெல்சன் ஆகியோரின் பாடல் வரிகள் அற்புதமென்றால், பாடல்களுக்கு நடனங்கள் அமைத்த பிருந்தா மாஸ்டரின் உழைப்பு வேற லெவல். அவரது நடன அமைப்புகளில் பெரும்பாலானோர், கருப்பு அல்லது மாநிறத்தில் ஆடுவது கொள்ளை அழகு! கதைக்களத்துடன் பெரிதும் ஒன்றிப்போகிறது.
ஏகா லகானி, சந்திரகாந்த் ஆகியோர் வடிவமைத்த உடைகள் ஆகட்டும், விக்ரம் கெய்க்வாட் மற்றும் கிருஷ்ணதாஸ் கூட்டாளிகளின் ஒப்பனைகள் ஆகட்டும் பொன்னியின் செல்வனை ஒரு Reference படமாக ஆக்க பேருதவி புரிந்திருக்கின்றன.
தோட்டாதரணியின் கலை அரண்மனைகளாக இருந்தாலும், பொது இடங்களாக இருந்தாலும், பாசறைகளாக இருந்தாலும் அந்த காலகட்டத்திற்கே அழைத்துசென்றிருக்கிறார். தூண்கள் இருந்தால் அதிலும் தூரிகை செய்திருக்கிறார், தூண்கள் இல்லாவிட்டாலும் தூண்களை அமைத்திருக்கிறார், இவரை இக்கால சினிமா விஸ்வகர்மா என்றால் அது மிகையாகாது.
ரவிவர்மன், ஒளிப்பதிவில் நம்மை சோழ சாம்ராஜ்யத்திற்கே அழைத்து சென்றுவிட்டார் எனலாம். அத்தனையையும் சேர்த்து நடிகர்களையும் வரைந்திருக்கிறாரோ எனும் அளவிற்கு பிரேமிற்கு பிரேம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார். அவர் படம் பிடித்த காட்சிகளை ஸ்ரீகர் பிரசாத் அழகாக கோர்த்திருக்கிறார்.
படத்தில் பங்குபெற்ற அத்தனை கிராப்ட்டுகளும் கச்சிதமாக தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
1954 இல் அமரர் கல்கியால் ஐந்து வருட ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை, பலகோடி வாசகர்களை கொண்ட அற்புதமான படைப்பை, அதை முதலில் வாச்சித்து சுவாசமாக்கிக்கொண்ட தலைமுறை முதல் அதை இன்றும் புதிதாக வாசிக்க ஆரம்பித்திருக்கும் தலைமுறை வரை கிடட்த்தட்ட இந்த 70 ஆண்டுகளில் நான்கு தலைமுறை வாசகர்களின் மனதில் காட்சிகளாக விரிந்து பரவசப்படுத்தியிருக்கும் அற்புதமான படைப்பை திரைப்படமாக தயாரித்து, பொன்னியின் செல்வனை படித்திருக்காத பல நூறுகோடி பேர்களுக்கும் சோழப்பேரரசின் வீரமும் தீரமும் ஆட்சி செலுத்திய பாங்குமென அத்தனையையும் கொண்டு சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர்களாகிவிட்டார்கள் லைகா நிறுவனத்தார். தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கும், லைகா சென்னையின் தலைவர் தமிழ்க்குமரனுக்கும் கோடானுகோடி நன்றிகள்!
காட்சிப்படுத்துல்களில், பிரமாண்டம் என்பதை விட மிகவும் இயல்பாக இருக்கவேண்டும் என்பதில் அவர் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். பல காட்சிகளில் அரண்மனைக்குள் முக்கியஸ்தர்கள் நிற்கிறார்கள், கல்லில் அமர்ந்துகொள்கிறார்கள், இவ்வளவு ஏன் தரையில் சம்மணம் இட்டு அமர்கிறார்கள். இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினிமா வாயிலாக இந்திய சினிமாவுக்கு கிடைத்திருக்கும் கோஹினூர் வைரத்தையொத்த ஒரு ரத்னம். பொன்னியின் செல்வனை அற்புதமாக திரையில் கொண்டுவந்திருக்கிறார். நாலு முக்கிய நடிகர்கள் நானூறு துணை நடிகர்களை இயக்கியவர் என்றில்லாமல், நடித்திருக்கும் நானூறு நடிகர்களுமே மிகப்பெரிய நடிகர்கள் என்கிற அளவில் அத்தனை பெரிய நடிகர்களுக்கும் சமரசம் இல்லாமல் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்திருக்கும் ஒரே இயக்குநர் இவர், மணிரத்னம், அவர் நம்மவர் என்று மார்தட்டி சொல்லமுடியும்!
பொன்னியின் செல்வன் – பாகம் 1, தமிழ்சினிமாவின் பொக்கிஷம்!