a K.Vijay Anandh review
விருமன் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக முத்துலட்சுமி மருமக தேன் என்று வைத்திருக்கலாம். ஏனென்றால் இந்தப்பட்த்தின் கதையின் ஆரம்ப புள்ளி விருமனின் அம்மா முத்துலட்சுமி என்றால் நடுவில் புகுந்து சுபமாக முடித்து வைக்கக்காரணமாக இருப்பது விருமனின் மாமன் மகள் தேன். அதுமட்டுமல்லாமல் படம் முழுவதுமே முனியாண்டி அம்மா, இரண்டாவது மனைவி, இரண்டு மருமகள்கள் என்று அவர்களுக்காகவே பயணிக்கிறது. இது நல்ல விஷயமும் கூட. மண்ணின் செழிப்பும் பெண்ணின் மகிழ்ச்சியும் தானே நமது நாட்டில் பிரதானமாக கொண்டாப்படும் விஷயங்கள்!
அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் படம் முழுவதும் போட்டோவிலேயே நடிப்பது போன்ற உணர்வென்றால், தேனாக வரும் அதிதி ஷங்கர் தண்ணீர் கேன் போட்டே நடிக்கிறார். பொதுவாக ஷங்கரின் படங்களில் கதாநாயகிகளுக்கு பாடல் காட்சிகளில் சவாலான நடன அசைவுகள் கொடுக்கப்படும். விருமனில் இரண்டே பாடலுக்குத்தான் ஆடுகிரார் எனினும் அதிதி ஷங்கர், ஷங்கர் பட நாயகிகளின் ஒட்டுமொத்த நடன அசைவுகளையும் அதுவும் பாவாடை தாவணியிலேயே ஆடி பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும், வேட்டையை மடித்துக்கட்டிக்கொண்டு பைக் ஓட்டும் விருமன் முன் பாவாடை உடுத்திக்கொண்டு அப்படியே பெட்ரோல் டேங்கில் படுத்துக்கொண்டு பயணிப்பது எல்லாம் வேற ரகம், கிறங்கடித்திருக்கிறார்கள், பாடல் முடிவில் அப்படியே எழுந்து கட்டிக்கொள்கிறார் கார்த்தியை. அதிதி ஷங்கர், அடுத்த டாக் ஆஃப் தமிழ் சினிமா நாயகியாக ஒரு நீண்ட இன்னிங்ஸில் வலம் வருவார்.
கில்லியில் மதுரைக்கார இளம் முத்துப்பாண்டியாக கலக்கிய பிரகாஷ்ராஜ் அதற்கு துளி கூட சளைக்காதவாறு, முதிர்ந்த முனியாண்டியாக கலக்கியிருக்கிறார் விருமனில். தாசில்தாராக கை நிறைய – பை நிறைய சம்பாதித்தாலும் வீட்டில் இன்னொரு ஆண்மகன் தலையெடுத்து விடக்கூடாது – அது தன் சொந்த மகனே என்றாலும் – என்கிற மாதிரியான ஒரு சேடிஸ்ட் ரகம். இப்படி பல அப்பன்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
எல்லா மகன்களும் அடிமையாக இருந்துவிடுவதில்லையே, விருமனும் விறைத்துக்கொண்டு திரிகிறான் அப்பா முன். தாய் இல்லாத மகன்களுக்கு இன்னொரு தாய், தாய்மாமன், அற்புதமான உறவு, அதிலும் ராஜ்கிரண் என்றால் கேட்கவும் வேண்டுமா..? மருமகன் கார்த்தியும் மாமன் ராஜ்கிரணும் அப்படியே கிராமத்து உறவுகளை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இன்னொரு தாய்மாமனாக கருணாஸ், லொடுக்கு பாண்டியிலிருந்து அப்படியே தேர்ந்த குணச்சித்திர நடிகராக விஸ்வரூபம் எடுக்கிறார், சமீப காலங்களில்.
வின்னர் வடிவேலு மாதிரி இதில் சூரி முயற்சி செய்திருக்கிறார். பல இடங்களில் கார்த்தியுடனான காமெடி காம்பினேஷன் நன்றாகவே வொர்க் அவுட் ஆகி சிரிக்க வைத்திருக்கிறார்.
வீட்டிற்குள் ஒரு வில்லனாக அட்டு நாயகன் அருண், ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் மல்லுக்கட்டுலாம் போட்டு பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்றால், வீட்டிற்கு வெளியே ஒரு வில்லனாக ஆர்கே சுரேஷ் என்று மிரட்டியிருக்கிறார்கள். ஏலம் எடுக்கப்போய் ஒலப்பி விடும் ஆர்கே சுரேஷின் நய்யாண்டித்தனம் ரசிக்க முடிகிறது.
சிங்கம்புலி, ஓ எ கே சுந்தர் மற்றும் குழவிக்கல்லாக இந்திரஜா என்று அனைத்து நடிகர்களும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பிசகினாலும் ஏதேனும் ஒரு தொலைக்காட்சி தொடரின் கம்ப்ரஸ்டு வேர்சன் ஆக மாறியிருக்கக்கூடும் என்கிற நிலையில் மிகவும் கவனமாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான கிராமத்து ஆக்ஷன் மசாலாவாக விருமனை இயக்கியிருக்கிறார் முத்தையா.