a K.Vijay Anandh review
அமீர்கான் படங்கள் என்றாலே பன் மடங்கு நேர்த்தி அதைவிட பன்மடங்கு சுவராஸ்யம் இருக்கும் என்கிற நம்பிக்கையை லால் சிங் சட்டாவும் பொய்யாக்கவில்லை.
என்னமாதிரியான டெக்னாலஜியை கொண்டு படமாக்கியிருக்கிறார்கள் தெரியவில்லை, வாலிப அமீர்கான் முதல் இயல்பான அமீர்கானாக மாறும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் அவரது தோற்றமும் அப்பாவியான அவரது உடல்மொழிகளும் அபாரம்.
அதற்கு முன், கால்கள் நன்றாக இருந்தாலும் மூளையில் ஒரு பிரச்சினை என்பதால் நடக்கக்கூட முடியாமல் செயற்கை கால் பொருத்தப்படும் சிறுவன் லால் சிங் சட்டாவை அவனது மூளைக்குள் புகுந்து ஓடவைக்கிறாள் ரூபா, பின்பு அவனது மனதிற்குள்ளும் புகுந்து, லால் சிங்கை ஒருதலைப்பட்சமாக காதல் வயப்பட வைப்பதும் அழகு.
ஒரு ரயில் பயணத்தில், தனது வாழ்க்கையை அப்படியே கதையாக சக இரயில் பயணிகளிடம் விவரிக்கிறார் அமீர்கான். சிறுவயதில் அவர் சந்தித்த முதல் நாடுதழுவிய பிரச்சினையாக இந்திராகாந்தியின் எமர்ஜென்சி, தீவிரவாதிகளை ஒழிக்க இந்திராவின் பொற்கோவில் ஆபரேஷன், அதைத்தொடர்ந்து அவர் படுகொலை, அதைத்தொடர்ந்து சீக்கியர் மேல் காங்கிரஸாரால் காட்டப்படும் கொலை வெறியாட்டம், வளர்ந்த பிறகு அத்வானியின் ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர் என்று அழகாக அவரது வாழ்க்கையுடன் வெளியில் நடக்கும் பிரச்சினைகளும் இணைந்து பயணிக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மீது ஏவப்படும் இஸ்லாமிய பயங்கரவாத்தை துணிச்சலாக அந்த இஸ்லாமிய பயங்கரவாதியின் வாயிலாகவே “ எங்க நாட்டுல அத்தனைபேருக்கும் மலேரியா..” என்று சொல்ல வைத்திருப்பதற்கு அமீர்கானை பாராட்டியே ஆகவேண்டும் என்றால், பாலிவுட் நடிகைகள் புத்தாண்டு தினங்களில் பாய் தயாரிப்பாளர்களால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு எப்படி சின்னாபின்னாமாக்கப்படுகிறார்கள் என்பதை, கரீனா கபூர் தற்கொலைக்கு முயலும் அந்த ஒரே ஒரு காட்சியின் மூலமாக துணிச்சலாக காட்சிப்படுத்தி ஆச்சிரியப்பட வைக்கிறார்கள்.
மலேரியா என்றால் என்ன என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும். அப்படியே கோத்ரா இரயில் எரிப்பையும் , காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதையும் காட்டியிருந்தால் மலேரியா யாருக்கு நிஜமாகவே அதிகமாக இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கும். அவ்வளவு ஏன் கரினா கபூர் சையிப் அலி கானை திருமணம் செய்தபிறகு ஏன் கரினா கபூர் கானாக மாறவேண்டும்.? சையிப் அலிகானுக்கு மலேரியா கொஞ்சம் ஓவர்தான் , இல்ல அமீர்கான்..? இனவெறியும் மலேரியாவில் தானே வரும்!
உயிரோடு இருக்கும் பார்ட்னரை கொன்று அவனது பங்கையும் ஆட்டையைப்போடும் தொழிலதிபர்கள் சூழ் உலகில், பனியன் ஜட்டி வியாபாரத்திற்கு விதை போட்ட தனது சக இராணுவ வீரன் நாக சைதன்யா வியாபாரம் ஆரம்பிக்கும் முன்னரே மறைந்துவிட்ட சூழலிலும் அந்த வியாபாரம் தொடங்கப்பட்டு, அவருக்கான பங்குகளும் அவரது மனைவிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது, லால் சிங் சட்டாவின் மூலம்.
அட அவ்வளவு ஏன் போர்ச்சூழலில் அமீர்கானால் முதுகில் சுமந்து காப்பாற்றப்படும் அந்த எல்லை தாண்டிய இஸ்லாமிய தீவிரவாதி, முதுகில் குற்றுயிராக கிடக்கும் நிலையிலும் அமீர்கானை சுட்டுக்கொல்ல முயற்சிக்கிறான். ஆனாலும், அவனை தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து அவனது வாழ்க்கை மாறுவதற்கு மட்டுமல்ல, பாகிஸ்தானின் மிதமிஞ்சிய மலேரியா தாக்கத்தால் அடுத்த தலைமுறை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கே பள்ளிக்கூடம் கட்டவும் உதவுகிறார் லால் சிங் சட்டா.
படம் முழுவதும் வரும் கரீனாகபூரை விட ஒரே ஒரு காட்சியில் தோன்றும் ஷாருக் கான் கைதட்டல்களை அள்ளிவிடுகிறார். லால் சிங் சட்டா சொல்லும் கதை லைவாக இருக்கவேண்டுமென்பதற்காக அந்த கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் அருமை.
கமல்ஹாசனின் சிப்பிக்குள் முத்து போலவே இருக்கிறது என்று சொல்லமுடியாவிட்டாலும், அந்தப்படத்தை பார்த்தவர்களுக்கு அந்தப்படம் நினைவில் வருவதை தவிர்க்க இயலாது என்றால் அது மிகையல்ல.
இந்துவாக இருந்து நல்லவனாக நடிக்கலாமா..? பேசாமல், சீக்கியராக அந்தக்கதாபாத்திரத்தை படைத்துவிடலாம் என்று நினைத்திருப்பார்களோ என்னமோ!
அப்புறம், கொஞ்சம் abnormal behavior கொண்ட இளைஞனை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வார்களா..?
தொழில் நுட்ப ரீதியாக ஒளிப்பதிவு இசை எல்லாமே அருமை. தமிழில் முத்தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார், அனைத்து வரிகளும் அற்புதம். பொதுவாக சமீபகாலங்களில் நேரடி தமிழ்ப்படங்களில் வரும் தமிழ் பாடல் வரிகளை விட இப்படி வேறுமொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் படங்களில் வரும் தமிழ் பாடல்களின் வரிகள் அற்புதமாக இருப்பது வியப்பாக உள்ளது.
மற்றபடி லால் சிங் சட்டாவை, புறக்கணிக்கப்படவேண்டிய படமாக அல்லாமல், மனித நேயத்தை விதைக்கும் படமாக இயக்கியிருக்கிறார் அத்வைத் சந்திரன்.