a K.Vijay Anandh review
பிரபுதேவா யாரும் எதிர்பாரா ஆச்சிரியங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். சென்ற மாதம் வெளியான மைடியர் பூதம் படத்திற்காக தன் முடி முழுவதையும் இழந்து நடித்தார். இந்த மாதம், இன்று ஆகஸ்டு 5 இல் வெளியாகும் பொய்க்கால் குதிரை படத்தில் இடது காலில் பாதியை இழந்தவராக நடித்து அசத்தியிருக்கிறார்.
மனைவியை இழந்து தன் ஒரே மகள் ஆழியா - மகிழுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு சாதாரண மிடில் கிளாஸுக்கும் கொஞ்சம் கீழான அப்பாவாக அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
உலகப்பணக்காரனுக்கு கூட இவ்வளவு காஸ்ட்லியான நோய் வராது போல, பார்த்துக்கொண்டிருக்கும் - ஹவுசி ங் போர்டு குடியிருப்பில் வசிக்கத்தேவையான வருமானத்தை வைத்துக்கொண்டு, மனைவி இறந்ததன் மூலம் வந்த இன் ஷுரன்ஸ் தொகை கொண்டு மகளை படிக்க வைக்கலாம் என்று நினைப்பவருக்கு, 70 லட்சம் இருந்தால் தான் உன் மகள் உயிரோடே இருப்பாள் என்கிற செய்தி பேரிடியாகத்தானே விழும்!
அதிலிருந்து படத்தின் விறுவிறுப்பு ஆரம்பிக்கின்றது.
ஒரு அழகான குடும்பம், நல்ல நண்பன் ஜெகன், எதிர்த்தவீட்டுக்கார ரைசா , அவ்வப்பொழுது மகளுக்காக செய்யும் கலாட்டாக்கள் என்று ஒரு கவிதையாக முதல் பாதி போனது என்றால், ஒரு காட்டாற்று வெள்ளமாக எதிர்பாரா திருப்பஙகளுடன் புரட்டிப்போடுகிறது இரண்டாம் பாதி. ஆம், அது வரலட்சமி வந்தபிறகு!
பிரபுதேவா மகளை காப்பாற்ற எழுபது லட்சம் கிடைத்ததா ? ஒரு மகளை காப்பாற்றவே வக்கில்லாத பிரபுதேவாவால் பல மகள்கள், மகன்கள் காப்பாற்றப்படுகிறார்களே அது எப்படி என்பது விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் சீட்டின் நுனியில் இருந்து பார்த்து ரசிக்கலாம்.
டி இமானின் இசையில் கார்க்கியின் பாடல்வரிகள் அழகு. உதாரணமாக மகள் உடைக்கத்தானே செல்போன்... என்பதாக வரும் வரிகள்.
பிரபுதேவாவின் மகளாக வரும் ஆழியா துறுதுறுவென்று இயல்பாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்னொரு பேபி ஷாலினியை பார்த்த உணர்வு. அப்பாவிற்கு செயற்கைக்கால் பொருத்த, நிஜமாகவே ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்கும் போது அழவைத்துவிடுகிறார்.
ஜெகன், காமெடியிலிருந்து அழகாக குணச்சத்திர கதாபாத்திரங்களுக்கு ரூட் போட்டிருப்பது தெரிகிறது.
அரிசி மூட்டை வாங்கி சமைக்காமலே வைத்திருப்பது போல, ரைசாவை பயன்படுத்தவே இல்லையோ என்கிற அளவிற்கு துளி கிளாமர் இல்லாமல் ரைசாவா இது என்கிற அளவிற்கு காட்டியிருக்கியிருக்கிறார்கள்.
ஷாம், பிரகாஷ்ராஜ் வந்துபோகிறார்கள், அவர்களை இரண்டாம் பாகத்தில் நிறைய பயன்படுத்தப்போகிறார்களோ!
அட்டகாசமான டைட்டில், அதற்குள் அருமையான பொழுதுபோக்கை தந்திருக்கிறார் சன்தோஷ் P ஜெயக்குமார்.