ஆர் ஜே வாக, சினிமா கிரிட்டிக்காக தன் ஊடக வாழ்க்கையை தொடங்கிய ஆர் ஜே பாலாஜி, கதாநாயகனின் நண்பனாக நடிக்க ஆரம்பித்து, இன்று முன்னணி நாயகன் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் என்றால் அது மிகையல்ல.
அதிலும், எல் கே ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் என்று தொடர்ந்து மூன்று வெற்றிகளை கொடுத்திருக்கிறார். இந்த மூன்று படங்களிலும் வெறும் நடிகராக மட்டும் இருந்துவிடாமல், கதை ஆக்கத்திலும் இயக்கத்திலும் பங்கெடுத்திருப்பது கூடுதல் தகவல்.
வீட்ல விசேஷம் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது குழுவினருடன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர் ஜே பாலாஜி, “ எல் கே ஜி யைவிட மூக்குத்தி அம்மன் வெற்றிபெற்றது. இன்று மூக்குத்தி அம்மனை விட வீட்ல விசேஷம் வெற்றி பெற்றிருக்கிறது. குடும்பத்துடன் வந்து அனைவரும் படத்தை பார்க்கும் வண்ணம் எனது குழுவினருடன் ஆற அமர அமர்ந்து விவாதங்கள் வைத்து நல்ல கதையை உருவாக்கிறோம். அதற்காகவே ஒரு படத்திற்கு ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக்கொள்கிறேன்.
ஜனவரி 2022இல் விஜயிடம் ஒரு கதை சொல்லி, இந்தக்கதையை திரைக்கதையாக்க எவ்வளவு நாட்கள் வேண்டும் என்று கேட்க, ஒரு வருடம் கேட்டிருக்கிறேன். தளபதி 67 இல்லன்னா 77 இல்லன்னா 87 பண்ணிக்கலாம். நாம் இந்த திரைத்துறையில் தான் நீண்ட நாள் பயணிக்க போகிறோம். யாரும் குறை சொல்லிவிடமுடியாதபடியான கதைக்களங்களை உருவாக்கி படமாக்க ஆசைப்படுகிறோம்.
வசூல் புள்ளிவிபரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், பரவலாக அதுவே ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கான அளவுகோலாக இருப்பதால், எனது படத்தையும் வசூல் அடிப்படையில் வெற்றிப்படம் என்று அறிவித்து கொள்கிறேன்…” என்றார்.
இவருக்கு, மற்ற இயக்குநர்கள் எழுத்தாளர்களின் கதைகளிலும் நடிக்க ஆர்வமிருக்கிறது, அப்பொழுதுதான் தன்னை முழுமையான ஒரு நடிகராக உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிறார் ஆர் ஜே பாலாஜி.
தனது படைப்பளுக்கு தானே ஒரு கிரிட்டிக்காக இருந்து பழகிவிட்டால் அனைத்து படைப்பாளிகளும் ஓரளவு நல்ல படங்களையே கொடுக்க இயலும் தானே!
அந்த வகையில், இவரது தொடர் வெற்றிகளின் ரகசியம், இவருக்குள் இன்னும் அந்த ஜாலியான திரை விமர்சகர் என்று அழைக்கப்படும் Critic விழித்துக்கொண்டிருப்பது தான் என்றால் அது மிகையல்ல.