இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த முயற்சி எனலாம், ஆர் மாதவன் எழுதி இயக்கியிருக்கும் படம் ராக்கெட்டரி த நம்பி எஃபெக்ட்
பொதுவாக, வெற்றி பெற்ற , தன் வாழ் நாள் முழுவதும் நல்லபெயருடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மறைந்த சாதனையாளர்களை பற்றிய பயோபிக் படமெடுப்பார்கள். ஆனால், இந்திய தேசத்தின் கடைக்கோடி நாகர்கோயிலில் பிறந்து, ஒட்டுமொத்தமாக இந்த தேசத்தின் வான் ஆளுமையை உயர்த்த தன் வாழ்க்கையையும் அறிவையும் அர்ப்பணித்து, அதற்கான உரிய அங்கீகாரத்திற்கு பதில் தேசவிரோத சக்திகளின் சதிப்பின்னல்களால் தன் மீது விழுந்த அபாண்டமான பழியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, கூகுளில் தேடினால் இவர் ஏதோ குற்றவாளி என்கிற ரேஞ்சுக்கு தரவுகள் வந்து கொட்டினாலும், சட்டப்போராட்டத்தின் மூலம் தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்து ஒரு தன்னம்பிக்கை மனிதராக, வாழ்ந்துகொண்டிருக்கும் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயாணனின் வாழ்க்கையை படமெடுத்திருக்கிறார் ஆர் மாதவன்.
அலைபாயுதே படம் மூலம் அறிமுகமாகி, அழகுக்கு இலக்கணமாக அறியப்படும் மாதவன் சொல்கிறார், நம்ம நம்பி நாராயணன் அவருடைய இளமைப்பருவத்தில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியை விட அழகு என்று, சிலாகித்ததோடு மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க மெனக்கெட்டதை ஒரு வகுப்பாகவே நடத்தி காண்பித்தார், இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்.
1959 முதல் 2014 வரையிலான காலகட்டங்களில் நம்பி நாராயணன் சந்தித்த இருண்ட பக்கங்களை முதன்மையாக காட்டாமல், அவருடைய அறிவால் அவர் சாதித்த விஷயங்கள் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கடல்கள் பற்றிய படமாகவே ராக்கெட்டரியை இயக்கியிருக்கிறார், ஆர் மாதவன்.
ராக்கெட்டரி அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது, “ விக்ரம் வேதாவிற்கு பிறகு வீட்டில் சும்மாதான் இருந்தேன். அந்த நேரத்தில் நம்பி நாராயணன் பற்றி என் நண்பர் சொல்ல, அவர் மீது பெரிய மரியாதை தொற்றிக்கொண்டது. உடனடியாக அவரை திருவனந்தபுரத்தில் சென்று சந்தித்து அவரது கதையை முழுமையாக கேட்டறிந்து, அதனை அடுத்த எட்டு மாதத்தில் திரைக்கதையாக எழுதி, அவரிடம் சென்று காட்டி மேலும் மேலும் மெருகேற்றி, அக்கதையை படமாக்குவதற்காக கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ராக்கெட் சார்ந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்.
முதலில் இன்னொரு இயக்குநர் இயக்குவதாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரால் முடியாமல் போக, இந்தக்கதையில் நீ வாழ்ந்திருக்கிறாய். இன்னொருவருக்கு புரியவைத்து இதை எடுப்பதற்கு பதிலாக நீயே இயக்கிவிடு என்று நம்பி நாராயணன் சொல்ல, நானே இயக்கிவிட்டேன். நடிச்சமா, சம்பாதிச்சமா என்று இருந்த எனக்கு உண்மையாகவே இது கடினமான பணியாகத்தான் இருந்தது.
நம்பி நாராயணனின் நிஜ சாதனைகள் மீது இருக்கும் நம்பகத்தன்மை கெடாமல் இருக்கும் என்கிற எண்ணத்தில், படத்தில், சினிமாத்தனங்கள் அதிகம் இல்லாமல், மிகவும் யதார்த்தமான ஒப்பனைகளோடு காட்சிகளை எடுத்திருக்கிறோம்.
தமிழ் , ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தனித்தனியாக ஷூட்டிங் நடந்தது, அதற்காக ஆறுமாதங்கள் நடிகர்கள் ஒத்திகை பார்த்து கடினமான பயிற்சி எடுத்துக்கொண்டார்கள்.
விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட் என் ஜின்களை பார்ப்பதற்கு வைர நகை போன்று இருக்கும். ஆனால், அது இயங்க ஆரம்பிக்கும் நிலையில், அதன் சத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த உண்மையான சத்தத்தை படத்தில் சேர்த்திருக்கிறோம்.
ஆம், இந்தப்படம் வெளிவந்த பிறகு நம்பி நாராயணன் பற்றி கூகுளில் தேடினால் அவரைப்பற்றிய மகத்தான விஷயங்கள் மட்டுமே தரவுகளாக வரவேண்டும், வரும்..” என்றார்.
படத்தில், ஷாருக்கான் மற்றும் சூர்யா அவர்களாகவே நம்பி நாராயணனுடன் உரையாடுவது போன்று நடித்திருக்கிறார்கள்.
பஞ்சாங்கம் பார்ப்பவர்களை மூட நம்பிக்கைவாதிகள் என்று சொல்கிறார்கள், ஆனால், நமது மிஷன் மங்கள்யான் திட்டமே பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தான் வெற்றிகரமாக நடந்தது அதுவும் நம்பி நாராயணனின் மருமகனான அருணன் தலைமையில் என்பதை குறிப்பிட்ட ஆர் மாதவன், “”நம் முன்னோர்கள் கண்டு பிடித்து வைத்த எதையும் புறக்கணித்துவிடமுடியாது, அவற்றை இன்றைய நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து ஸ்பேஸில் நாம் ஆதிக்கசக்தியாக வரவேண்டும்..” என்றும் “ இந்த தேசத்திற்காக தங்கள் வாழ் நாளையும் அறிவையும் அர்ப்பணிக்கத்தயாராக பல ஆயிரம் விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்காமல் வெளி நாடு சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளை நம் நாட்டிலேயே ஏற்படுத்தி கொடுத்து நமது தேச முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்..” என்று தனது ஆதங்கத்தையும் முன்வைத்தார்.
இந்தப்படம் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டு, பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது. அங்கே படத்தை பார்த்த ஏ ஆர் ரஹ்மான் ஒரு ரசிகரைப் போல ஆர் மாதவனை பாராட்டியிருக்கிறார். மேலும், இந்தப்படத்தின் டிரையலர் நியூயார்க்சதுக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ராக்கெட்டரி த நம்பி எஃபெக்ட் படம் ஜூலை 1 இல் உலகமுழுவதும் வெளியாகிறது.