மிகவும் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் நிறைந்தவராகக் காணப்பட்ட விஷ்ணு விஷால், இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப் ஐ ஆர்' வெளியாகவிருக்கிறது. 'மோகன்தாஸ்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். 'ஜீவி' படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்..” என்று மூச்சுவிடாமல் தனது படங்களைப் பற்றிய விபரங்களையும் எதிர்கால திட்டங்களையும் பற்றி பகிர்ந்துகொண்டார்.
திருமண விஷயமாக மனந்திறந்த விஷ்ணு விஷால், இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'ராட்சசன்' படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜுவாலா குட்டாவை தேர்ந்தெடுக்க காரணம்..?
பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மரியாதை காரணமாகவே அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஏனெனில் எனக்கு காதல் மீது நம்பிக்கை போய்விட்டது. நான்காண்டு காதல், ஏழு ஆண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். உறவுமுறையில் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவதுதான் சிறந்தது. நான் இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டிருந்த பொழுது அவர்கள் என்னுடைய உணர்வை மதித்தார்கள். அவர்கள் அடிப்படையில் விளையாட்டு வீராங்கனை என்பதால், அவர்களின் நேர்மறையான அணுகுமுறை என்னை கவர்ந்தது. அவர்கள் ஹைதராபாத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமியை நிறுவி நிர்வகித்து வருகிறார்கள். எனக்கு அவர்கள் ஆதரவாக இருந்ததைப் போல், நானும் அவர்களுக்கு எதிர்காலத்தில் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டப்போது, அதனை திரைப்படமாக தயாரிக்கலாமா..! என்று கேட்டேன். அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருக்கிறதா? என க் கேட்டார். இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் அவர்களுடைய சுயசரிதையை திரைப்படமாகத் தயாரிக்க விரும்புகிறேன்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவிலும் தொடரும் உங்கள் திரைப்பயணத்தின் ரகசியம்..?
திறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கதாநாயகன்', 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது. அதன் பிறகு 'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதுபோன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தற்போது 'எஃப் ஐ ஆர்', 'மோகன்தாஸ்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.
சினிமா கடினமான காலகட்டத்தில் இருக்கும் பொழுது உங்களை போன்ற நடிகர்கள் சம்பளத்தை குறைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?
நான் 'ராட்சசன்' படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக 'ராட்சசன்' படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.
'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
திரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது. 'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.
காடன் அனுபவம்?
எல்லா எமோஷன்களையும் கொண்ட கேரக்டர் அது. இது போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். யானையுடன் பணியாற்றியது மறக்க முடியாத சம்பவம். இயக்குநர் பிரபுசாலமனுடன் பணியாற்றியதும் மறக்க முடியாதவை தான். அவருடைய ஸ்டைலே தனிதான். பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கி சமூகத்தின் மீதான அக்கறையை மேம்படுத்தும் பொறுப்புணர்வு மிக்கவர்.
என்று மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டிருந்தவரிடம், சூரிக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்சினை என்று கேட்டபோது, சற்றே முகம்வாடிய , “அவர், அவரை யாரோ இயக்குகிறார்கள் , உண்மை உணர்ந்து ஒரு நாள் என் தந்தையையும் என்னையும் தேடி வருவார்..” என்று முடித்துக் கொண்டார்..” விஷ்ணு விஷால்.