கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா, அம்மு அபிராமி ஆகியோர் நடிக்க பாப நாசம் படத்திற்குப் பிறகு தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் தம்பி படத்தின் இசையை நடிகர் சிவகுமார் வெளியிட சூர்யாவும் கார்த்தி உள்ளிட்ட தம்பி குழுவினரும் பெற்றுக் கொண்டனர். தம்பி படத்திற்காக கார்த்திக் நேத்தா மற்றும் விவேக் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, இந்தப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. ஏனென்றால், எனது தம்பி சூரஜ் தயாரிக்க இன்னொரு தம்பி கார்த்தியுடன் நடித்திருக்கிறேன்.
கார்த்தி, தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுப்பார். ரஜினியிடம் பார்த்த அதே குணம் அவரிடம் இருந்தது கண்டு மகிழ்ந்தேன். சந்திரமுகி படம் நடிக்கும் போது, இந்தத் தலைப்பே உன்னுடைய கதாபாத்திரம் தான் என்று ரஜினி சொல்வார். அதைப்போல் படத்தின் சுவரொட்டிகளில் ஹீரோவுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் பார்த்தேன், இது சினிமாவில் பார்க்கமுடியாத மிகவும் அரிதான நிகழ்வு. ஆர் டி ராஜசேகர், காக்க காக்க உட்பட மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார். ஒரு இடைவேளைக்குப் பிறகு, தம்பிக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசைக்கு நான் ரசிகை.
தம்பி படம் மூன்று குடும்பங்களின் சங்கமம். இயக்குநர், ஜீத்து ஜோசப்பின் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும், இணை இயக்கு நர்கள் போலவே பணிபுரிந்தார்கள். பெண்களின் மேற்பார்வையில் அவர்களும் உழைக்க வேலைகள் நடைபெறுவதில் மகிழ்ச்சி.
இன்னொரு குடும்பம், எனது தம்பியின் குடும்பம். மும்பையில் அவரும் அவரது மனைவியும் அந்தளவுக்குப் பார்த்துக் கொண்டார்கள். படப்பிடிப்புக்கு அம்மாவும் வருவார். நான் அவர்களைக் கவனிக்கும் பொருட்டு, ஏதேனும் சாப்பிடுகின்றீர்களா என்று கேட்பேன். ஆனால், நான் ஹீரோயின் அம்மாவாக வரவில்லை, தயாரிப்பாளரின் அம்மாவாக வந்திருக்கிறேன். நான் தான் உங்கள் அனைவரையும் கவனிக்க வேண்டும் என்பார். என் தம்பி தயாரிப்பாளராய் ஆனதில் அவருக்கு அவ்வளவு பெருமிதம். அந்த தருணம் என்னால் மறக்கவே முடியாத தருணமாக ஆகிப்போனது.
மூன்றாவது சிவகுமார் குடும்பம். கார்த்தி இருந்தார், சத்யராஜ் மாமா இருந்தார்கள். எங்கள் வீட்டைப்பொருத்தவரை சத்யராஜ் தான் ஸ்டார். கட்டப்பாவுடன் நடித்தீர்களா அம்மா என்று எனது குழந்தைகள் கேட்பார்கள். நிகிலா, அம்மு அபிராமி உட்பட எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனக்கு, நான் தான் அதிமான அளவில் எனக்கு முன் சாதித்த நடிகைகளுடன் நடித்திருக்கிறேன் என்பதில் பெருமை. இந்தப்படத்திலும் செளகார் ஜானகி அம்மாவுடன் நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக் குழுவினருக்கு அவர் கையால் சமைத்தெல்லாம் கொடுப்பார். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
தம்பி, எல்லோரையும் மகிழ்விக்கும் Sentiments மற்றும் intelligence நிறைந்த படம்…” என்றார்.
தம்பி, டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது.