ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில், "என் நாட்டு மக்களையும், மண்ணையும் சுரண்டியவர்களுக்கு அழிவு தான் முடிவு.." என்று வசனம் பேசியிருப்பார். அந்தப்படத்தின் வில்லன் மணல் கொள்ளையனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பான்.
சினிமாவில் தான் அதிரடி அரசியல் வசனம் பேசுகிறார், நிஜத்தில் செய்யமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மணல் மாஃபியாவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த டாக்டர் இளவரசனை அதிரடியாக மன்றப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் வரிசையிலிருந்தும் நீக்கியிருக்கிறார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன், விருத்தாசலம் பகுதிகளில் ஓடும் மணிமுத்தாறு, வெள்ளாறு, கோமுகி ஆறுகளில் களிமண் தெரியும் அளவிற்கு 30 அடி ஆழம் வரை மணலை சட்டவிரோதமாக அள்ளி கோடிகோடியாக சம்பாதித்து வந்திருக்கிறான்.
அந்தப்பகுதியில் உள்ள விவசாயக் கூலித்தொழிலாளர்களை அவர்களது வறுமையைச் சாதகமாக்கிக் கொண்டு, தினமும் இத்தனை வண்டிகள் மண் அள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து இருக்கிறான்.
இவனது மூர்க்கத்தனமான மணல் அள்ளும் தொழிலால், கருவேப்பிலங்குறிச்சி, நேமம், மேலப்பாளையூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி மற்றும் தேவங்குடி ஆகிய வெள்ளாறு பாசன பகுதிகள் வறண்டு பாலைவனமாகக் கிடக்கின்றன.
விழுப்புரம் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிசேகர், கோபுராபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகிய மணல் புரோக்கர்கள் கைதுசெய்யப்பட்டபோது இவர்களுக்குப் பின்னணியில் இளவரசன் தான் மாஃபியாவாகச் செயல்பட்டு உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பா.மா.க, வன்னியர் சங்கம், அதிமுக என்று தனது சமூகவிரோத செயல்களுக்குக் கட்சிப் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்ட இளவரசன், தற்பொழுது ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அங்கே தாவியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனைப் பற்றிய தகவல், ரஜினிகாந்த் கவனத்திற்கு எடுத்துச் சென்ற அடுத்த நொடியே அவனைக் கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கியதுடன், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் அவனுடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவு இட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தின் இந்தச் செயல், மணல் மாஃபியாக்கள் நிறைந்த பிற கட்சித் தலைவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.